Show all

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லீம் அமைப்புகள் பத்வா.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லீம் அமைப்புகள் பத்வா வெளியிட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி, கொடூரத் தாக்குதல்கள் நடத்திய பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை விட கொடிய தீவிரவாத இயக்கம், ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் என அமெரிக்கா அலறுகிறது.

ஆனால் இந்த இயக்கம், ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் தன் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது. இந்தியாவிலும் இந்த இயக்கம் தடம் பதிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தீவிரவாத அமைப்பான ஐஎஸ் மீது இந்திய முஸ்லிம் மத தலைவர்கள் 1,050 பேர் சேர்ந்து ‘பத்வா’ வெளியிட்டனர். ‘வன்முறையை இஸ்லாம் அறவே ஒதுக்குகிறது. ஆனால், ஐஎஸ் அதனை நீடித்திருக்கச் செய்கிறது’ என பத்வா ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஸின் செயல்பாடுகள் இஸ்லாம் நெறிகளுக்கு எதிரானது என்று கூறி பத்வா பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பத்வாவில், ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி, அஜ்மீர் தர்கா,  உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இமாம்கள், பல்வேறு மத குருக்கள் அங்கீகரித்து கையொப்ப மிட்டுள்ளனர். இந்தியாவில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் மத தலைவர்கள் ஒருங்கிணைந்து கூட்டு பத்வா வெளியிட்டு இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

இதனிடையே, இந்திய முஸ்லீம் கூட்டமைப்புகள், ஐ.எஸ் தீவிரவாத இயக்கதிற்கு எதிராக பத்வா வெளியிட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஹேலேனா ஒயிட் கூறுகையில், உலகில் அதிக முஸ்லீம் மக்கள் வாழும் இடத்தில் இராண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான பத்வா வெளியிடப்பட்டிருப்பது  ஐ.எஸ்க்கு எதிரான முக்கிய கருத்தாக அமைந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.