Show all

நிர்மலா சீதாராமன் அறிவித்தார் சில சலுகைகள்! எதிர்பார்ப்பு:- மோட்டார் வாகன சட்ட முன்வரைவையே கிடப்பில் போடவேண்டும்

கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் தலைப்பாகியிருந்த ஆட்டோமோபைல் துறையின் வரலாறு காணாவீழ்ச்சி குறித்த செய்தி- இன்றுதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவிக்கு எட்டியிருக்கும் போல. அறிவித்துள்ளார் சில சலுகைகள். ஆட்டோமெபைல் துறையினர் எதிர்பார்ப்போ: மோட்டார் வாகன சட்ட முன்வரைவையே கிடப்பில் போடவேண்டும் என்பதாக தெரிய வருகிறது.

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விற்பனை வீழ்ச்சியால் துவண்டு போயுள்ள இந்திய வாகனச் சந்தைக்கு நம்பிக்கையூட்டும் முகமாக நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்திய வாகனத் துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் செய்தி, கடந்த ஒரு மாத காலமாக ஊடகங்களில் தலைப்பாகி வரும் வேளையில், இந்திய பொருளாதாரம் மோசமான சரிவை சந்தித்து வருவதாக நாட்டின் முதன்மையான நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இன்று மாலை நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் சரக்கு-சேவை வரி விதிப்பு குறைப்பு, வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி குறைப்பு, உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், சரிந்து கிடக்கும் வாகனச் சந்தையை மீட்கும் விதமான சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். 

ஏற்கனவே நாட்டின் வாகனச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பல தங்களுடைய ஆலைகளை தற்காலிகமாக மூடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இவற்றை கருத்தில் கொண்டு பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- நடுவண் மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவுகளை கருத்தில் கொண்டு, விதிக்கப் பட்டிருந்த தடையால்- முதலமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகளுக்கான வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வாங்கப்பட்டு வந்தன. 

மிகவும் அவசர தேவை இருந்தால் மட்டுமே, அவர்களுக்கான புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு வந்தன. அதன்படி, குறிப்பிட்ட மாநில அரசில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. 

தற்போது இந்தத் தடையைக் கைவிட நடுவண் அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, அரசு நிறுவனங்கள், அமைப்புகள் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. இதனால் மாநில அரசுகளும் புதிய வாகனங்களை வாங்கலாம். 

மாநில அரசுகள் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களையும் வாங்கலாம். இதனால் நாட்டின் வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு சீராகும். இந்த புதிய விதியால் பொருளாதார மந்தம் சரியாகும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், 18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121  (31.03.2020) க்கு முன் வாங்கப்படும் பிஎஸ் 4 விசைப்பொறி பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும். பிஎஸ் 6 விசைப்பொறி மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பிஎஸ் 4 விசைப்பொறி வாகனங்களை இயக்குவது சட்டத்திற்கு புறம்பானதாக மாறிவிடும் என்ற நிலையைத் தள்ளுபடி செய்ய விரும்புவதாகவும் கூறினார். 

தொடர்ந்து, வாகனத் துறையில் தேவையை அதிகரிக்கும் வகையில் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

வீட்டுக்கடன், வாகன கடன்களின் வட்டி குறையும் என்று கூறிய அவர், மின்வாகனங்களுக்காக அறிவிக்கப்பட்ட சலுகைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இதெல்லாம் போதாது! இன்னும் நடுவண் அரசு, வெறுமனே கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையாக, பொருளாதரத்திற்கு எதிராக முன்னெடுத்த அனைத்துத் தடைகளையும் நீக்கினால் மட்டுமே, இந்தியா எதிர் கொண்டிருக்கிற பொருளாதார வீழ்ச்சியிலிருந்து முழுமையாக எழ முடியும் என்கின்றனர் பொருளாதார அறிஞர் பெருமக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.