Show all

கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி! நிடி ஆணைய துணைத் தலைவர் ராஜிவ் குமார் தகவல்

நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்திய மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார். நிடி ஆணைய துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ள, கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறித்து.


06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ‘இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன’ ஆணையத்தின்  துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சரிவு குறித்து அவர் அளித்த பேட்டியில், கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது. அரசு ஏதாவது செய்தாக வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.

யாரும் யாரையும் நம்ப முடியாத நிலை உள்ளது. இதற்கு 2 வழிகள் தான் உள்ளன. ஒன்று, ஏதாவது நடவடிக்கை எடுத்து இயல்பு நிலை திரும்ப செய்ய வேண்டும். இரண்டாவது, சில துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றார். நிதி நெருக்கடிக்கு- குறைவான முதலீடுகள், குறைவான உற்பத்தி ஆகியன முதன்மைக் காரணங்களாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ‘இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன’ ஆணையத்தின்  துணைத் தலைவர் ராஜிவ் குமார் மற்றும் தலைமை அமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி ஆகியோர், எதிர்க்கட்சிகள் சொல்வதை ஆமோதித்தனர். இருவரும் இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட நிலையில், இன்று நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

நாட்டின் பொருளாதார சூழ்நிலை தொடர்பாக அவர் பேசினார். அதில், சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. உலக அளவிலான வர்த்தகம் தேக்கநிலையை அடைவது புதிது ஒன்றும் அல்ல. இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி என வளர்ந்த நாடுகள்கூட பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளன. என்று ஏதோ வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு ஆறுதல் சொல்வது போல தேற்றியுள்ளார் இந்திய மக்களை.

பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். பொருளாதார சீர்திருத்தம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். இந்த நடவடிக்கை இனி வரும் காலகட்டங்களிலும் தொடரும். தலைமைஅமைச்சர் சொன்னதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். செல்வத்தை உருவாக்குபவர்களை நாங்கள் மதிக்கிறோம். வரி கட்டுவதை எளிமையாக்கியுள்ளோம். ஒவ்வொரு துறையையும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்ல வழி செய்யப்பட்டுவருகிறது. சரக்கு-சேவைவரி விழுக்காடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.