Show all

இந்தியா,சீனா வர்த்தகம், பொருளாதாரத் துறை ஒத்துழைப்பு அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை

வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து, இந்தியாவும், சீனாவும் வௌ;ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தின. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்தியா-சீனா நிதி மற்றும் பொருளாதார விவகார ஆலோசனைக் குழுவின் 8-ஆவது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியத் தரப்பில் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் உயரதிகாரிகள் குழு கலந்து கொண்டது. சீனத் தரப்பில், நிதித் துறை இணையமைச்சர் ஷி யோபின் தலைமையில் அந்நாட்டு குழு கலந்து கொண்டது. கூட்டத்தில் சீன அமைச்சர் ஷி யோபின் பேசுகையில், இந்தியாவில் வரலாற்று ரீதியில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக சரக்கு-சேவை வரி விதிப்பு சீர்திருத்தச் சட்ட மசோதா (ஜிஎஸ்டி) நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற பின்னணியில், பேரியல் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக இரு நாடுகளும் பரஸ்பரம் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது; இதேபோல், இருநாடுகளும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், வளர்ச்சிக்கான உந்து சக்திகளையும் நமது நாடுகள் உருவாக்க வேண்டியுள்ளது என்றார். கூட்டத்தில் சக்திகாந்த தாஸ் பேசுகையில், இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளில், அனைத்து துறைகளும் அண்மைக் காலங்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன; இரு நாடுகளின் உறவில் இதுபெரும் முன்னேற்றம் ஆகும் என்றார். சீனாவின் ஹாங்சு மாகாணத்தில் அடுத்த மாதம் ஜி-20 அமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து, கோவா மாநிலத்தில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவும், சீனாவும் தங்களிடையே வர்த்தகம், பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.