Show all

முஸ்லீம் லீக் கண்டனம்! கண்டனத்திற்கு மக்கள் அங்கீகாரம்!! 'குஜராத்துக்கு ஒரு நியாயம் வேலூருக்கு ஒரு நியாயம்'

வேலூர் தேர்தல் இரத்து எதிர்க்கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த எலிகளுக்குப் பயந்து, கூரையை கொளுத்தும் நடவடிக்கையில் பாஜக-அதிமுக கூட்டணியினரைத் தவிர மற்றவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் தேர்தல் ரத்து என்பது, இந்தியக் குடிஅரசு சித்தாந்தத்தை குழிதோண்டி புதைக்கும் படுகொலை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்யுமாறு, இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் குடியரசு தலைவர் ரத்து செய்துள்ளதாகச் சொல்லப் படுகிறது. 
இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பல எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டு வருகின்றன. 
அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 
வேலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கதிர் ஆனந்தின் இல்லத்திலோ, நிறுவனத்திலோ, அலுவகத்திலோ வருமான வரித்துறையின் சோதனையில் எவ்விதமான பணமும் பிடிபடவில்லை என்று சோதனையிட்டவர்கள் செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்திற்க்கு அறிவிப்பு செய்த பிறகு அடுத்த இரண்டு நாள் கழித்து வேறு ஓரு இடத்தில் இருந்து 10 கோடி ரூபாய் அளவுக்கு பிடிப்பட்டது என்ற செய்தி வெளியாகியது. 
பிடிப்பட்ட தொகைக்கும் திமுக வேட்பாளருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் எந்தவித சம்மதமும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். இதற்கு பின்னரும் தி.மு க. வேட்பாளர் மற்றும் இருவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து இருக்கிறது. 
குஜராத்தில் 511 கோடி ரூபாய் பிடிப்பட்டிருக்கிறது. பஞ்சாபில் 348 கோடி ரூபாய் பிடிபட்டிருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் எந்த ஒரு தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்ப்படவில்லை. 
தமிழ்நாட்டில் 202 கோடி ரூபாய் பிடிப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 10 கோடி ரூபாய் பிடிபட்ட வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் போது மீதமுள்ள 192 கோடி பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் ஏன் ரத்து செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. 
குஜராத்திலும், பஞ்சாப்பிலும் எந்த ஓரு தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்யாத தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை அவசரமாக ரத்து செய்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. 
தேர்தலை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததா அல்லது தலைமைஅமைச்சரின் தூண்டுதலின் பேரில் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதா என்ற கேள்விக்கும் மக்களுக்கு பதில் தெரிந்து ஆக வேண்டும். 
இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மோடி அரசையும் பாஜக மதவாத கொள்கைகளையும், கடுமையாக எதிர்த்து வருகிறது என்பதை நாடு அறியும். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் பாஜகவை எதிர்ப்பதில் தீவிரமாக இருக்கிறது என்பதையும் உலகம் அறியும். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணி பாரதீய ஜனதா கட்சிக்கு சிம்ம சொப்பனமாக ஆகி இருக்கிறது. 
இத்தகைய தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் வேரூன்றி உள்ள திராவிட காலச்சாரத்தை கேவலப்படுத்தும் முறையிலும் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் இந்த இந்தியக் குடிஅரசு சித்தாந்தத்தை குழிதோண்டி புதைக்கும் படுகொலையை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள். இப்போது தேர்தல் நடைபெறும் புதுச்சேரி உள்ளிட்ட 39 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சியினர் படுதோல்வி அடைவது நிச்சயம். இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒரு இயங்கலை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் 'தேர்தல் ஆணையத்தின், குஜராத்துக்கு ஒரு நியாயம் வேலூருக்கு ஒரு நியாயம்' என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என்று 80.16 விழுக்காட்டினரும் உண்மையில்லை என்று 13.23 விழுக்காட்டினரும் கருத்து இல்லை என்று 6.61 விழுக்காட்டினரும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,125.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.