Show all

தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். விஜயகாந்த்:

பழனியில் நடைபெற்ற தேமுதிக கட்சி கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப்பற்றி அறிந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த், நமது கட்சியின் தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்களுக்காக மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்று முடிவுறும் தருவாயில், திண்டுக்கல் நகரத்தை சார்ந்த கஜேந்திர பிரபு என்கின்ற தேமுதிக தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை கண்ட நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்று (17.09.2015) மருத்துவமனைக்கு நேரில் சென்று நான் அவரை பார்த்தபோது எனது மனம் மிகுந்த வேதனை அடைந்தது. அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

தேமுதிகவின் தொண்டர்கள் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் போராடி வெற்றிபெற வேண்டும் என்கின்ற நம்பிக்கையோடும், தைரியத்தோடும் இருக்கவேண்டும். அதை விட்டு விட்டு, கோழைத்தனமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை நான் எப்பொழுதும் அனுமதிக்கமாட்டேன்.

வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் வரும், போகும், அதற்கு தற்கொலை தீர்வாகாது. இதை என்றைக்குமே நான் ஊக்கப்படுத்த மாட்டேன்.

எளிதில் உணர்ச்சிவயப்பட்டு, நொடியில் எடுக்கின்ற இதுபோன்ற முடிவுகளால் சம்பந்தப்பட்டவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் எப்படிப்பட்ட பாதிப்புகளை அடைவார்கள் என்பதை ஒருகணம் யோசித்துப்பார்த்தால் நிச்சயமாக இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடமாட்டார்கள்.

எனது தொண்டர் கஜேந்திர பிரபு, என்மீது அளவுகடந்த பிரியத்தோடும், பற்றோடும் இருந்தவர் என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே இதுபோன்ற குடும்பத்தை பாதிக்கின்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபடவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேமுதிக தொண்டர்களின் வாழ்க்கை முறையைப்பார்த்து, அடுத்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நம் வாழ்க்கை இருக்கவேண்டும்.

தமிழக மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் நாம். மக்களுக்கு துரோகம் செய்யும், ஏமாற்றும் ஆட்சியாளர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுவதுதான் நமது தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

எனவே யாரும் எந்த காலத்திலும் இதுபோன்ற முடிவுகளை எப்பொழுதும் எடுக்ககூடாது என அன்புக்கட்டளையிட்டு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க்கை என்பதே நம்பிக்கைதான், நாம் பிறப்பது ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நாம் வாழ்வது சரித்திரமாக இருக்கவேண்டும் என்கின்ற மன உறுதியோடு அனைவரும் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.