Show all

மோடி கையெழுத்து போட்டதாக கூறப்படும் தகவலை நடுவண் அரசு மறுத்து உள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் 50 பேர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்ததாக தலைமை சமையற்கலைஞர் விகாஸ் கன்னாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். அப்போது விகாஸ்கன்னா, இந்திய தேசியக்கொடியில் மோடியின் கையெழுத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, தான் வெகுமதியாக கொடுக்க போவதாகவும் அவர் தெரிவித்தார். மோடி கையெழுத்திட்ட கொடியை விகாஸ்கன்னா ஊடகங்களுக்கும் காண்பித்தார்.

இது டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. காங்கிரஸ் இதற்காக மோடியை கடுமையாக விமர்சித்தது. இதனிடையே தேசியக் கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக கூறப்படும் தகவலை நடுவண் அரசு மறுத்து உள்ளது.

இது பற்றி, டெல்லியில் நடுவண் அரசின் செய்தி தொடர்பாளர் பிராங்க் நரோன்ஹா கூறும்போது, “மோடி கையெழுத்திட்ட தேசியக் கொடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. தலைமை சமையற் கலைஞரின், மாற்றுத்திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைப்பாட்டுடன் வடிவமைத்து இருந்த ஒரு துண்டு துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்த துணியில்  வெள்ளை  நிறமோ, அசோக சக்கரமோ கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.