Show all

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும்.

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது

தமிழ்நாட்டில் இப்போது 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மது குடித்துவிட்டு பெண்களும், மாணவ, மாணவிகளும் தகராறு செய்யும் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? என்பது உங்களுக்கு தெரியும். மதுக்கடைகளை திறந்து மதுவை அறிமுகம் செய்தவர் கருணாநிதி, டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்தவர் ஜெயலலிதா.

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் 7 ஆயிரம் மதுக்கடைகளை திறந்துள்ளன. தமிழகத்தில் உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு மதுவிலக்காகத்தான் இருக்கிறது. மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான்.

தமிழகத்தின் மொத்த வருவாயான 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியில், 36 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை மூலம் கிடைக்கிறது. மதுப்பழக்கம் சமூகத்தை அழிக்கக்கூடியது. பா.ம.க. தான் மது ஒழிப்பிற்காக தொடக்கம் முதலே போராடிவருகிறது. மதுவுக்கு எதிராக 35 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

அதேபோல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால், அதிக மது ஆலைகளை நடத்துபவர்களே தி.மு.க.வினர் தான். தமிழகத்தில் மொத்தம் 10 மது ஆலைகளை அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். அவற்றில் 5 ஆலைகளை தி.மு.க.வினர் நடத்துகின்றனர். 3 ஆலைகளை அ.தி.மு.க.வினர் நடத்துகின்றனர். இரு ஆலைகளை காங்கிரஸ் கட்சியினர் நடத்துகிறார்கள். தி.மு.க.வினரின் மது ஆலைகளை மூடினாலே 50 சதவீத மது விலக்கு நடைமுறைக்கு வந்து விடும்.

ஆனால், மதுவிலக்கு வந்தால் தான் இவர்கள் மது ஆலைகளை மூடுவார்களாம். மதுவிலக்கு வருவதற்கு 10 மாதங்கள் ஆகும் என்றால், அதற்குள் தி.மு.க. சார்பு மது ஆலைகள் தயாரிக்கும் மதுவை குடித்து 80 ஆயிரம் பேர் இறப்பார்கள் என்பதால் மது ஆலைகளை மூடுங்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மன்றாடினேன். இதுவரை அவரிடமிருந்து பதில் வரவில்லை.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும். 2016-ம் ஆண்டில் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும். இது பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாத்தியம். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தேர்தல் பிரசாரக்குழுத் தலைவர் எதிரொலி மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.