Show all

மோடியின் மீதான தேர்தல் விதி மீறல் வழக்கு தள்ளுபடி

கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது குஜராத் முதல் அமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது ஓட்டுச்சாவடியின் முன்பு தாமரை சின்னத்துடன் செல்பேசியில் செல்பி எடுத்துக் கொண்டார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என புகார் கூறப்பட்டதால், மோடி மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

 

ஆனால் அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறாததால் அகமதாபாத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டரான நிஷாந்த் வர்மா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, மோடி தேர்தல் விதிமீறலில் ஈடுபடவில்லை என காவல்துறை அறிக்கை அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மோடி மீதான விசாரணையை கைவிட்டு வழக்கை முடித்தது. அத்துடன், நிஷாந்த் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. பின்னர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

 

இதை எதிர்த்து நிஷாந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், மோடியின் தேர்தல் விதிமீறல் புகார் குறித்து குஜராத் பா.ஜ.க. அரசு எந்த விசாரணையும் நடத்தவில்லை என கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அடங்கிய அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.