Show all

மம்தா பானர்ஜியின் முழக்கப் போராட்டம்! ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவையும், பாராட்டையும் பெற்றுள்ளது

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் முழக்கப் போராட்டத்தைத் நேற்று நள்ளிரவிலிருந்து தொடங்கியிருக்கிறார். விடிய விடிய கொல்கத்தா நகரம் பரபரப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜனநாயகத்தை காக்கும் போரில் மம்தா பானர்ஜி உடன் துணை நிற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜியின் முழக்கப் போராட்டத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட ஆதரவு தெரிவித்துள்ளார். 

நடுவண் குற்றப்புலனாய்வு அமைப்புக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் முழக்கப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொல்த்தாவில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கீச்சுவில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, பாசிச பாஜகவின் செயலை முறியடிக்க மம்தா பானர்ஜிக்கு துணை நிற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தனது கீச்சுப் பக்கத்தில் கருத்துக்கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாசிச பாஜக ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் போரில் மம்தா பானர்ஜி உடன் துணை நிற்கிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கொல்கத்தாவில் நடைபெறும் விவகாரங்கள் மிகவும் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அரசியலமைப்பை பாதுகாக்க மம்தா பானர்ஜியின் பக்கம் துணை நிற்போம் என்றார்.

நடுவண் குற்றப்புலனாய்வு அமைப்பை தனது கைப்பாவையாக பயன்படுத்தும் பாஜகவின் செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் நடுவண் அரசு இதுபோன்று அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

தலைமை அமைச்சர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகள் வினோதமாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடினார்.

நடுவண் அரசு தனது அரசியல் லாபத்திற்காக நடுவண் குற்றப்புலனாய்வு துறை உள்ளிட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி வருவதாக உமர் அப்துல்லாவும், நடுவண் நிறுவனங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இதயமின்றி செயல்படுவதாக மெகபூபா முப்தியும் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, நடுவண் குற்றப்புலனாய்வு துறை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.