Show all

மல்லையாவின் கடவுச் சீட்டு முடக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே

ஐடிபிஐ வங்கியிலிருந்து ரூ.900 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கு தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.

 பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததாக கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா மீது புகார் எழுந்தது. இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் வங்கி ஆகியவை கிங்ஃபிஷர் நிறுவனத்தையும், விஜய் மல்லையாவையும் ‘வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாவர்கள்’ என அறிவித்தன.

 இதுதொடர்பாக வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 இந்தச் சூழலில், விஜய் மல்லையா கடந்த மார்ச் 2-ஆம் தேதி பிரிட்டனுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன்தொகையை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

 இதனை அடிப்படையாகக் கொண்டு, விஜய் மல்லையா மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

 இதுதொடர்பான விசாரணைக்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் மார்ச் 18, ஏப்ரல் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. ஆனால், மல்லையா நேரில் ஆஜராகவில்லை.

அமலாக்கத் துறை விதிமுறைப்படி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு ஒரு நபருக்கு மூன்று முறை மட்டுமே அவகாசம் அளிக்கப்படும். அவ்வாறு ஆஜராகவில்லையென்றால், சம்பந்தப்பட்டவர்களின் கடவுச் சீட்டை முடக்கும் நடவடிக்கைககளை அமலாக்கத் துறை முன்னெடுக்கும்.

 அதன்படி, வழக்கு விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்காததால் விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டை முடக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும், அவரது மாநிலங்களவை எம்.பி. அந்தஸ்துக்காக வழங்கப்பட்டுள்ள ‘ராஜீய முறை கடவுச் சீட்டை’ முடக்கக் கோரியும், மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்துக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.

 இதுகுறித்து அமலாக்கத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

 அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடக்கினால், இதுகுறித்து பிரிட்டன் அரசுக்கு இந்தியா தெரியப்படுத்தும். மேலும், அங்கிருந்து மல்லையாவை வெளியேற்றுமாறும் பிரிட்டன் அரசை இந்தியா கேட்டுக்கொள்ளும்.

 மேலும், மல்லையாவின் கடவுச் சீட்டு முடக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையைப் பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை அமலாக்கத் துறை அணுகும். மேலும், அவரை தேடப்படும் நபராக அறிவிக்குமாறு இண்டர்போலையும் அமலாக்கத்துறை கேட்டுக்கொள்ளும் என்றார் அவர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.