Show all

பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக கேரள மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி மீது வழக்குப் பதிவு

பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக கேரள மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  செவ்வாய்க் கிழமை மாலை 7.30 மணியளவில் அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சட்டத்தை மதித்து நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உம்மன் சாண்டிக்கு அனுப்பியுள்ளேன். முதல்வருக்கும் எனது சக அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவேன் என்றார்.

அரசு தலைமை கொறடா தாமஸ் உன்னியடியானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். கேரள நிதியமைச்சர் கே.எம்.மாணிக்கு எனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ராஜினாமா செய்துள்ளேன் என்றார். இருப்பினும், கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். கேரளாவில் மதுபான பார்களைத் திறக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் விசாரணை நடத்த அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கே.எம். மாணி ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.  கே.எம்.மாணி, கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியைச் சேர்ந்தவர். லஞ்சப் புகாரில் சிக்கிய அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருந்தனர். ஆளும் கூட்டணியிலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர் நெறுக்குதலையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  நிதியமைச்சர் கே.எம்.மாணியின் ராஜினாமாவை ஆளுநர் பி.சதாசிவம் ஏற்றுக்கொண்டார்.

இத்தகவலை முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகம் உறுதிப்படுத்தியது.  கேரளத்தில் மது பார்களை மீண்டும் திறக்க நிதியமைச்சர் கே.எம்.  மாணி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டு, அதில் முதல் தவணையாக ரூ.1 கோடி பெற்றார் என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையை அடுத்து, அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. அமைச்சர் கே.எம்.மாணி, பார் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 கோடியை மூன்று தவணைகளில் பெற்றதற்கான ஆதாரங்களை சம்பந்தப்பட்ட 7 பேரிடமிருந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பெற்றனர். ஆனால் இந்த வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்லை என முடிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை முடிவினை எதிர்த்து திருவனந்தபுரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பலரும் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.  இதனால், கடந்த மாதம் (அக்டோபரில்) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிதியமைச்சர் கே.எம்.மாணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால், மணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.  இதேபோல், கேரளாவில் மதுபான பார்களை திறக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் விசாரணை நடத்த அம்மாநில உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்நிலையில்,  மாணிதனது பதவியை ராஜினாமா செய்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.