Show all

உங்கள் மீது ஏற்றப்பட்ட கடன் ரூ.60218.15! மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 விழுக்காடு உயர்ந்து

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 விழுக்காடு உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று நடுவண் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவண் அரசின் கடன் குறித்த 8-வது ஆய்வறிக்கையில் இந்தத் தகவலை நடுவண் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5116 வைகாசி மாதக் (சூன்-2014) கணக்கின்படி இந்திய நாட்டின் கடன் ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. அதன்பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று, தலைமை அமைச்சராக மோடி வந்தபின் நாட்டின் கடன் தமிழ்தொடர்ஆண்டு-5120 ஆவணி மாதக் (செப்டம்பர்-2018) கணக்கின்படி ரூ.82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசின் கடன் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்திய அரசின் பொதுக்கடன் ரூ.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 51.7 விழுக்காடு உயர்ந்து, ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

உள்நாட்டுக் கடன் 54 விழுக்காடு அதிகரித்து ரூ.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சந்தையில் நடுவண் அரசு கடன் பெற்ற அளவும் 47.5 விழுக்காடு அதிகரித்து, ரூ.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தங்க விற்பனை பத்திரத்தின் மூலம் கடன் ஏதும் இல்லாது இருந்த நிலையில், மோடி அரசு தற்போது ரூ.9 ஆயிரத்து 89 கோடி முற்றிலும் புதியதாக கடன் பெற்றுள்ளது.

இந்தியாவில் நேற்று வரை பிறந்துள்ள குழந்தை உட்பட இந்தியாவின் மக்கள் தொகையை 'உலகோ கணக்கீட்டுக் கருவி' (WORLD O METER) என்ற ஒரு நிறுவனம் பிறப்பு, இறப்பு அடிப்படையில் வினாடிக்கு இருவர் என இந்தியாவில் மக்கள்தொகை கணக்கில் கூடுவதாகக் கணக்கிட்டு வருகிறது.  அந்தக் கணக்கீட்டின் படி நேற்று வரை இந்தியாவின் மக்கள் தொகை 136,22,55,678 ஆகும். 

இந்தியாவில் நேற்று வரை பிறந்துள்ள குழந்தை உட்பட தலைக்கு ரூபாய் 60218.15 கடன் பெற்றுள்ளது. உங்களுக்கு தனிப்பட்ட வகையில் கடன் ஏதும் இல்லையென்றாலும், இந்தியக் குடிமகன் என்ற வகையிலும் மோடியை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்தவர் என்ற வகையிலும் நேற்றைய கணக்கின் படி உங்கள் ஒவ்;வொருவர் மீதும் ரூபாய் 60218.15 கடன் இருக்கிறது. 

நீங்கள் சம்பாதித்து, உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றி, பிள்ளைகளைப் படிக்க வைத்து, பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, நாட்டைக் காப்பற்ற வரியும் செலுத்துகின்றீர்கள். ஆனாலும் நீங்கள் கடன் இல்லாமல் வாழ ஆசைப்படுகின்றீர்கள்.

நீங்கள்; தேர்ந்தெடுத்த அரசு: தொழில் வணிக நிறுவனங்களை நடத்தியும் சம்பாதிக்கிறது. வரி மூலமாகவும் சம்பாதிக்கிறது. சாராய வணிகம் செய்தும் சம்பாதிக்கிறது. ஆனால் கடனும் வாங்கி உங்களைக் கடனாளியும் ஆக்குகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.