Show all

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (மார்ச்) மீண்டும் வெளிநாடு செல்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (மார்ச்) வெளிநாடு செல்கிறார். பெல்ஜியம், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

 

இந்திய-ஐரோப்பிய கூட்டமைப்பின் உச்சி மாநாடு மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக 30-ந் தேதி அவர் பெல்ஜியம் செல்கிறார்.

 

இந்த மாநாட்டின் போது ஐரோப்பிய கூட்டமைப்புடனான உறவு மேம்பாடு, இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு உயர் அதிகாரிகள் கடந்த வாரமே பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டுக்குப்பின் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு 31-ந் தேதி முதல் நடைபெறும் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சுமார் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்கிறார்.

 

எனவே இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நரேந்திர மோடி-நவாஸ் ஷெரீப் இடையேயான சந்திப்பு நிகழும் என கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக எந்தவித உறுதியான தகவலும், இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் இருந்து இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

 

அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கு ஏப்ரல் 2-ந் தேதி செல்கிறார். பலம் வாய்ந்த அரபு நாடுகளில் ஒன்றான சவுதிக்கு, இந்திய பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது சுமார் 6 ஆண்டுகளுக்குப்பின் இதுவே முதல் முறையாகும்.

 

இந்தப் பயணத்தின் போது, முக்கியமான பிராந்திய பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து சவுதி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

 

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 5-ல் ஒரு பங்கை நிவர்த்தி செய்யும் முக்கிய நட்பு நாடான சவுதி அரேபியா, இந்தியாவின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் விளங்குகிறது. மேலும் மிக அதிக இந்தியர்கள் வாழும் வெளிநாடும் சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.