Show all

கோவா அரசை கண்டித்து இன்று (செப்டம்பர்-26) கர்நாடகாவில் முழு பந்த்.

கர்நாடகாவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோவா அரசை கண்டித்து இன்று (செப்டம்பர்-26) கர்நாடகாவில் முழு பந்த் நடக்கிறது .

இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது . இன்று நடக்கும் பந்த்துக்கு ஆளும் காங்கிரசு அரசு எவ்வித ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் இந்த பந்த்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, கோவா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்புடையது கலசா பண்டூரி குடி நீர் திட்டம் ஆகும் . 3 மாநிலங்கள் வழியாக பாயும் இந்த மகதாயி நதியில் இருந்து கார்நாடகா மாநிலம் கதக், தார்வாட் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வர இந்த அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர் பிரச்னை போல் இது நீண்ட காலமாக முடிவு ஏற்படாமல் இழு பறியில் உள்ளது. இது தொடர்பாக நடுவர் ஆணையம் விசாரித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது . இதனால் கோவா அரசைக் கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று ஒரு நாள் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதனால் மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயங்கவில்லை . ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை . கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி , தார்வாட்,தும்கூர் , மங்களூரு, திமக்குரு உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் , ரயில் மறியல், கறுப்புக்கொடி ஏற்றம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் . பல்லாரி வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளன .

பந்த் காரணமாக தமிழக பேருந்துகள் கர்நாடகா செல்ல முடியவில்லை. ஓசூரில் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன .

கன்னட சலுவாளி கட்சி தலைவரான வாட்டாள் நாகராஜ், நிருபர்களிடம் பேசுகையில் ; கடலில் வீணாக கலக்கும் நீரை பயன்படுத்த கோவா எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல . இந்தப் பிரச்னையில் அரசியல் கட்சியினர் யாருக்கும் அக்கறை இல்லை. இதனை யாரும் நடுவண் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை . பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் அரசியல் கட்சியினர் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். கோவா மாநில முதல்வருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பந்த் காரணமாக வன்முறை ஏதும் நடவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் அதிகம் குவிக்கப்பட்டுள்ளனர் .

இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் . ஆனால் இன்று பந்த் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தது. இரு சக்கர வாகனங்களில் சென்றாலும், போராட்டக்குழுவினர் வாகனங்களை மறித்து வருவதால் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.