Show all

ஜனதாபரிவார; கூட்டணி ஒரு தேர்தலை சந்திப்பதற்குள் படு வேகமாக முறிந்து போனது

பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன் மும்முரமாக துவங்கிய ஜனதா பரிவார் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வேகமாக துவங்கிய இந்த கூட்டணி ஒரு தேர்தலை சந்திப்பதற்குள் படு வேகமாக முறிந்து போனது.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக ஜனதா கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவாக ஜனதா கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர முடிவு செய்தன. இதன் படி முலாயம் சிங் ( சமாஜ்வாடி ) , லாலு பிரசாத் யாதவ் ( ராஷ்ட்டிரிய ஜனதா தளம்) , ஐக்கிய ஜனதாதளம் ( நிதீஷ்குமார் ) மதசார்பற்ற ஜனதா தளம் , இந்திய லோக்தள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி உருவாக்கின. இதற்கு ஜனதா பரிவார் என பெயரிடப்பட்டது.

பீகார் தேர்தலை முதலில் கருத்தில் கொண்டும், பின்னர் வரும் பார்லி., தேர்தலிலும் கூட்டணி அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பீகார் தேர்தல் பிரசாரம் தீவிரமாக துவங்கியுள்ளது . இந்நிலையில் இங்கு தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த கட்சிகள் மத்தியில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக, சமாஜ்வாடி கட்சியின் மூத்த நிர்வாகியான ராம்கோபால் யாதவ் நிருபர்களிடம் பேசுகையில், நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு தரப்படவில்லை. போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையும் ஒதுக்கவில்லை. இதனால் நாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். பிற கட்சிகள் உடனான கூட்டணி குறித்து இதுவரை எவ்வித முடிவும் செய்யவில்லை. யாருடனும் பேசவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில், முலாயம்சிங் கட்சியினர் பீகாரில் ஒரு தொகுதியும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஜனதா பரிவார் தொடக்கத்திலேயே புஸ் ஆனது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.