Show all

ஜம்மு-காஷ்மீரில், நடுவண் சேமக் காவல் படையினரிடையே மோதல்! மூன்று வீரர்கள் சுட்டுக் கொலை

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'நடுவண் சேமக் காவல் படை' என்பது நடுவண் அரசின் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாகும். இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. 

பிரித்தானிய அரச பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட இந்தக் காவல் படை இந்திய விடுதலைக்;குப் பிறகு நடுவண் சேமக் காவல் படையானது. அண்மைக் காலங்களில், சட்டஒழுங்கு பாதுகாப்பிற்கு அடுத்ததாக நாட்டின் பொதுத் தேர்தல் பணிக்கும் இப்படை பயன்படுத்தப்படுகிறது. முதன்மைத்துவமாக பிரச்சனைக்குரிய பகுதிகளான சம்மு காசுமீர், பீகார் மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

1.கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் 2.கலகத்தைக் கட்டுப்படுத்தல் 3.இராணுவ அல்லது கலக தாக்குதலுக்கு பதிலடி அளித்தல் 4.இடதுசாரி தீவிரவாதத்தைக் கையாளுதல் 5.பிரச்சனைக்குரிய பகுதிகளில் இணைந்து ஒட்டுமொத்த தேர்தல் பாதுகாப்பு வழங்குதல் 6.முதன்மை நபர்களுக்கு பாதுகாப்பளித்தல் 7.தீயவர்களிடமிருந்து தாவர விலங்கினங்களை பாதுகாத்தல் 8.போர்காலத்தில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சண்டையிடல் 9.ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் பங்குகொள்தல் 10.இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிபுரிதல் ஆகியன இந்தப் படைப்பிரிவின் முதன்மைப் சட்டத்தில் வரையறைக்கப் பட்டுள்ளது.

நடுவண் சேமக் காவல் படையில்- 181 நிர்வாக பட்டாலியன்கள், 2 மகளிர் பட்டாலியன்கள், 10 விரைவு அதிரடிப் படை பட்டாலியன்கள், 6 கோப்ரா பட்டாலியன்கள், 2 டி.எம். பட்டலியன்கள், 5 சமிக்கை பட்டாலியன்கள் மற்றும் 1 சிறப்பு பணிப் பிரிவும் உட்பட மொத்தம் 207 பட்டாலியன்கள் உள்ளன.

ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் அடுத்த பட்டல் பாலியா பகுதியில், நடுவண் சேமக் காவல் படைவீரர்களின் முகாம் உள்ளது. இங்கு பணியாற்றும் கான்பூரை சேர்ந்த அஜித்குமார் என்ற வீரருக்கும், சக வீரர்கள் சிலருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அஜித்குமார், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ராஜஸ்தானை சேர்ந்த ஜூன்ஜூனு, டெல்லியை சேர்ந்த யோகேந்தர் சர்மா, ரெவாரியை சேர்ந்த உமீத் சிங் ஆகிய மூன்று நடுவண் சேமக் காவல் படைவீரர்கள் உயிரிழந்தனர். 

அவர்களை சுட்டு வீழ்த்திய கையோடு, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு அஜித் தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.