Show all

எனக்கு முதல்வர் ஆவதை விட பிரதமர் ஆவதுதான் கனவு: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

முதல்வராவதை விட இந்திய பிரதமர் ஆவதே எனது கனவு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கன்னியாகுமரியில் பேசியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர் கூட்டம் முளகுமுடு பகுதியில் நடைபெற்றுள்ளது.

 

அந்தக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசுகையில், கடந்த 50 ஆண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க. என மாறி, மாறி ஆட்சி நடத்தி வருகின்றனர்.

 

ஆனால் எவ்வித மாற்றமும், வளர்ச்சியும் தமிழகத்தில் இல்லை. எனவே மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

 

மக்களின் மனதினை அறிந்து சமத்துவ மக்கள் கட்சி செயல்படுகிறது. மரத்தடியின் நிழலில் இருந்த செடியாக ச.ம.க. இருந்த காரணத்தால் வளர்ச்சி தெரியவில்லை.

 

இன்றைக்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தங்கள் வாக்கு விழுக்காட்டினைச் சொல்லி மார்தட்டிக் கொண்டு இருக்கிறது.

 

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. கூட்டணியில் கூட்டணி தர்மத்தினை கடைபிடித்து சமத்துவ மக்கள் கட்சி இருந்த காரணத்தினால் கட்சியின் வாக்கு விழுக்காடு யாருக்கும் தெரியவில்லை.

 

அதிமுகவின் 46 விழுக்காடு வாக்கு வங்கியில் ச.ம.க.வின் வாக்கு விழுக்காடும் அடங்கும்.

 

எனவே தான் வருகிற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் நிற்கும், அப்போது தான் அங்கீகாரம் கிடைப்பது மட்டுமின்றி, நமது வாக்கு விழுக்காடும் தெரிய வரும்.

 

2021ல் ச.ம.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், அதற்கு 2016ல் நடைபெற கூடிய தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

 

234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் துணிவு சமத்துவ மக்கள் கட்சிக்கு உண்டு.

 

ஆனால் இன்றைக்கு ஒரு மாற்றம் வேண்டும். அதனை நோக்கி தான் சமக. சென்று கொண்டு இருக்கிறது.

 

கூட்டணி அமைப்பது தொடர்பாக பாஜக கட்சி மேலிட பார்வையாளரும், நடுவண் அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் சந்தித்து பேசி கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்து, கூட்டணி பேச்சு வார்த்தை துவங்கப்படும்.

 

பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தாலும், சிறுபான்மையினருக்கு ஒரு தீங்கு என்றால் குரல் கொடுப்போம்.

 

தற்போது நமது இயக்கத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 

இயக்கம் வளர்ச்சி அடைந்தால் தான் நிர்வாகிகளும், தொண்டர்களும் வளர்ச்சி அடையமுடியும்.

 

என்னை அனைவரும் முதல்வர் ஆகுங்கள் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால் எனக்கு முதல்வர் ஆவதை விட பிரதமர் ஆவதுதான் கனவு.

என்று பேசியுள்ளார்.

 

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.