Show all

வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் பணி இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது

வாக்காளர் பட்டியலில் இருந்து 6 லட்சத்து 46 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர்கள், இறந்தவர்கள் பெயர்கள், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

 

இதையடுத்து கடந்த 11-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ‘வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி பிப்ரவரி 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும்’ என்று அறிவித்தார்.

இதையடுத்து வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் கடந்த 15-ந் தேதி முதல் நடந்தன. இந்த பணி இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் பணியின் கீழ், இறந்த வாக்காளர்கள், இருமுறை பெயருள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இறந்த வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 483 பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட உள்ளன. வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்கள் என்ற அடிப்படையில், 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும், ஒரே வாக்காளர் எண் கொண்டதாக அறியப்பட்ட 7 ஆயிரத்து 500 பேரின் பெயர்களும், பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-ஐ அளித்த 97 ஆயிரம் பேரின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளின் அடிப்படையில் மட்டும் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 பேரின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-ஐ அதிகளவு அளித்தால், இந்த 6 லட்சத்து 46 ஆயிரம் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.