Show all

மறைந்த தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகளை மூட தடை

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மறைந்த தேசிய தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகள், புகைப்படங்களை மறைக்க  வேண்டியதில்லை என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த  அறிவிப்பு கடந்த 4ம் தேதி வெளியானது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலானது. இதனை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல்  ஆணையம் சார்பில் பணம், பரிசு பொருட்கள் போன்றவை கொண்டு செல்வதை தடுப்பதற்காகவும் அவற்றை பறிமுதல் செய்யவும் பறக்கும் படைகள்  அமைக்கப்பட்டன.

 

தமிழகம் முழுவதும் இந்தப் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணம், நகைகள், பொருட்கள் என  வாக்காளர்களுக்கு கொண்டுசெல்வதை கண்காணித்து இந்தப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், தாங்கள் கொண்டு  செல்லும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களைக் காட்டி அதனைக் கொண்டு செல்லவும் தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது.  அதேபோல, அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி சின்னங்கள் போன்றவற்றை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவை  மறைக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், சமீபத்தில் திருவள்ளுவர் சிலை தேர்தல் அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவள்ளுவர்  என்ன அரசியல்வாதியா, அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர், திருவள்ளுவர் சிலையை மறைக்க வேண்டிய அவசியம் என்ன என தமிழகம் முழுவதும்  சர்ச்சை எழுந்தது. இதேபோல்  அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் சிலைகள், மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் குழப்பமான முடிவுகளாலே இதுபோன்ற நடவடிக்கைகள்  எடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மறைந்த தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகளை மூட தடை  விதிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, நாட்டின் பிரதமர்,  முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்பட அரசியல் கட்சி சார்புடையவை அனைத்து தலைவர்களின் படங்கள், சிலைகள் மறைக்கப்பட வேண்டும்.  அதேநேரத்தில், இந்திய நாட்டின் ஜனாதிபதி, ஆளுநர், மறைந்த தேசியத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், புலவர்கள், வரலாற்றுத் தலைவர்கள்  ஆகியவர்கள் சார்ந்தவற்றை மறைக்க வேண்டியதில்லை. எனினும், சில தலைவர்களின் சிலைகள், படங்களை மறைக்க வேண்டுமா, வேண்டாமா என  சந்தேகம் எழும் பட்சத்தில், அந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் முன் தமிழக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.