Show all

கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் செத்து மிதக்கும் மீன்கள்

கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் மேட்டூர் நீர்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்களைச் சாப்பிடும் பறவைகளும் இறப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்தேக்கத்தில் கிடைக்கும் மீன்களை உண்பதற்கு ஆண்டுதோறும் நாரைகள், நீர்க்காகங்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து முகாமிடுவது வழக்கம். இப்பகுதியில் அதிகளவில் மீன்கள் சிக்குவதால், இங்கேயே தங்கி இனப்பெருக்கமும் செய்யும். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ரசாயன கழிவுகள் காவிரியாற்றில் கலக்கப்படுகிறது. இந்த கழிவுகள் அனைத்தும், மேட்டூர் நீர்தேக்கத்தின் இடதுகரையில் ஒதுங்கி தேங்கி நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

குறிப்பாக கீரைக்காரனூர், பண்ணவாடி, சேத்துக்குளி, ஒட்டனூர், கோட்டையூர், கூனாண்டியூர், நாகமரை போன்ற பகுதிகளில் ரசாயன கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால், மாசடைந்த தண்ணீரில் போதிய உயிர;வளி இல்லாதது போன்ற காரணங்களால் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இவ்வாறு மிதக்கும் மீன்களை இரையாக கொள்ளும் நாரை, கழுகு உள்ளிட்ட பறவைகள் மட்டுமின்றி தண்ணீரில் வாழும் சில வகை பாம்புகளும் செத்து மடிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி காவிரிக்கரையில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், மேட்டூர் அணையின் உட்பகுதி மட்டுமின்றி கரையோரமும் தேங்கி நிற்கின்றன. இதனால், தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீர் மிகவும் மாசடைந்து அதில் வாழும் மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கின்றன. உச்ச கட்ட அதிர்ச்சியாக இந்த மீன்களை இரையாக கொள்ளும் பறவைகளும் திடீர் திடீரென செத்து விழுகின்றன. இந்த கழிவுகளால் காவிரி கரையோரத்தில் வசிப்பவர்களின் கால்நடைகளுக்கும், கோழிகள் போன்ற பறவைகளுக்கும் நோய் பரவி, இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.