Show all

பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, விஜயகாந்தின் வாடிக்கையாக உள்ளது

பொது இடங்களில், விஜயகாந்தின் அநாகரிகம் தொடர்வது, தமிழக அரசியல் வட்டாரங்கள், பத்திரிகை வட்டாரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, தன் கட்சி நிகழ்ச்சிகளில் கட்சி பிரமுகர்களை, சட்டமன்றஉறுப்பினர்களை, தொண்டர்களை பலர் முன்னிலையில் அடித்து, துவைப்பது, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் வாடிக்கையாக உள்ளது. அந்த வரிசையில் நேற்று, பத்திரிகையாளர்களை காரித் துப்பி அசிங்கப்படுத்தி உள்ளார் விஜயகாந்த். இது பலதரப்பினரையும் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று நடந்த, விஜயகாந்த் கட்சியின் ரத்த தான முகாமுக்கு வந்திருந்த அவர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர்,

2016ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்குமா? என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், அ.தி.முக., ஆட்சியை பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா? என கூறியவர், திடுமென, பத்திரிகையாளர்களை நோக்கி காரித் துப்பினார்.

இதனால், அங்கு கூடிய நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக, விஜயகாந்திடம் விளக்கம் கேட்க, பதில் எதுவும் கூறாமல், அங்கிருந்து அலட்சியமாக புறப்பட்டு சென்று விட்டார் அவர். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சங்கங்கள் விஜயகாந்தின் செயலை கண்டித்து, அறிக்கை விட்டுள்ளன. அடுத்த கட்டமாக, விஜயகாந்த் வீட்டு முன் போராட்டம் நடத்தவும் பத்திரிகையாளர் சங்கங்கள் தயாராகி வருகின்றன.

விஜயகாந்த் காரித் துப்பியது பத்திரிகையாளர்களை பார்த்து அல்ல; மாறாக, அனைத்து ஊடகங்களின்முகத்தில் என்றே கருதுகிறோம். விஜயகாந்த், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்பது வேதனைக்குரியது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் விஜயகாந்த், தன் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்காத வரை, அவர் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.

- பாரதி தமிழன்,இணை செயலர், சென்னை பிரஸ் கிளப்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தன் நிலை மறந்து, பொது இடங்களில் நடந்து கொள்கிறார். ஊடகவியலாளர்களிடம் அவர் அநாகரிகமாக

நடந்து கொள்வது தொடர்கதையாகி விட்ட நிலையில், காரித் துப்பும் அளவுக்கு, அவருக்கு துணிச்சல் வந்துள்ளது. அதனால், அவரை இனியும் சும்மா விடக்கூடாது; அவர் மன்னிப்பு கோரும் வரையில், அவருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

- வி.அன்பழகன்,

தலைவர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்

விஜயகாந்தின் செயல்பாடுகள், அவர் நல்ல மன நிலையில் தான் உள்ளாரா என, சந்தேகிக்க வைத்துள்ளது. எனவே, நல்ல மன நல நிபுணரை வைத்து, அவர் மன நிலையை சோதிக்க வேண்டும்.விஜயகாந்த், மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம், அவர் தன் வீட்டில் மிருகங்களை தான் வளர்க்கிறார். அதனால், அவருக்கு அந்த குணம் ஏற்பட்டு விட்டது என, நினைக்கிறேன்.ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்தின் ஒவ்வொரு நடத்தையும் எனக்குத் தெரியும். அவர் தொடர்ந்து இதே போல பேசிக்

கொண்டிருந்தால், அவரின் கடந்த கால செயல்பாடுகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டியிருக்கும்.இப்படிப்பட்ட மனிதரை, அரசியல் ரீதியில் வளர்த்து விட்ட பாவத்தை, எந்த காரியம் செய்து துடைப்பது என, தேடிக் கொண்டிருக்கிறேன்.

சுந்தர்ராஜன்,

சட்டமன்றஉறுப்பினர்- தே.மு.தி.க., அதிருப்தி

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.