Show all

சிவசேனையின் பார்வையில் ஓகம் நாளும் ஓகப்பயிற்சியும்

ஓகம் பயிற்சி மேற்கொண்டால் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

 

சர்வதேச ஓகம்நாளைக் கொண்டாட முயற்சி எடுத்த மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ள சிவசேனை, கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான, சாம்னாவில் தலையங்கம் எழுதி விமர்சித்தும் உள்ளது.

சுமார் 130 நாடுகளை ஓகம் பயிற்சி மேற்கொள்ள வைத்த பிரதமர் மோடி பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் தகுதியானர். ஓகத்தின் மூலம் 130 நாடுகளை தரையில் கிடத்தியுள்ளார் பிரதமர்.

ஆனால் இப்போதைய தேவை என்ன? பாகிஸ்தானை அதேபோல தரையில் கிடத்த வேண்டும். அது ஓகத்தின் மூலமாக முடியாது; ஆயுதங்களின் மூலமாகவே அது சாத்தியமாகும்.

 

நிரந்தரமாக சவயிருக்கை (ஓகப் பயிற்சியின் இறுதியில் தரையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ஓகஇருக்கை) நிலையில் இருப்பதற்கு தகுதி வாய்ந்த ஒரு நாடு பாகிஸ்தான்.

 

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் ஓகம்நாளை எதிர்த்துள்ளனர். ஓகம் என்பது அறிவியல் சார்ந்த விஷயம். எனவே, அதை எதிர்க்கக் கூடாது. அந்தப் பயிற்சியால் பல விஷயங்களை சாதிக்க முடியும்.

 

அதேவேளையில் நமது அன்றாட வாழ்வில் விலைவாசி உயர்வு மற்றும் லஞ்சத்தால் மக்கள் படும் இன்னல்களுக்கு ஓகத்தால் தீர்வு கிடைக்குமா? இதற்கு விளக்கம் கிடைத்தால் பாராட்டலாம் என்று அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.