Show all

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் டெண்டர் ஊழல்

முந்தைய காங்., ஆட்சியின் போது மத்தியிலும், மாநிலங்களிலும் நடைபெற்ற ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன. அவற்றில் தற்போது வெளிவந்திருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் டெண்டர் ஊழல். இந்த ஊழலில் காங்., தலைவர்கள் பலரின் வாரிசுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ராஜஸ்தானில் காங்., ஆட்சி நடைபெற்ற போது 2010ம் ஆண்டு, 108 ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆம்புலன்சில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஜிகித்சா ஹெல்த் கேர் என்ற நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்றது. அந்நிறுவனத்துக்கே டெண்டரும் அளிக்கப்பட்டது. 35 மாவட்டங்களில் 450 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டன. பிறகு அந்நிறுவனம், அதிகப்படியான தொகைக்கு ரசீதுகளை சமர்ப்பித்துள்ளது. அந்நிறுவனம் குறிப்பிட்ட தொகையை அரசும் அளித்து வந்துள்ளது.

வசுந்தரா தலைமையிலான அரசு இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கடந்த ஆண்டு கடிதம் எழுதியது. இதனை ஏற்று வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் வழக்கு விசாரணையை துவக்கிய சிபிஐ., இந்த ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. இதில் முன்னாள் முதல்வர் அசோக் ஜெலட், சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா உள்ளிட்டோரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம், சச்சின் பைலட், ரவி கிருஷ்ணா, ஸ்வேதா மங்கள் ஆகியோருக்கும், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் சாதகமாக இந்த கான்ட்ராக்ட் முடிக்கப்பட்டு வந்துள்ளது என சிபிஐ, வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

ரசீதுகளில் முறைகேடு செய்தது மட்டுமின்றி, நிதிகளிலும் ரூ.2.56 கோடி அளவிற்கு குளறுபடி செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது : பா.ஜ., தலைவர் கிரித் சோமைய்யா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்திடம் அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்த ஊழல் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக தணிக்கை அடிப்படையில் விசாரிக்க ஆசாத் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதற்குள் ராஜஸ்தானில் ஆட்சி மாறி விட்டது. அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வசுந்தரா கேட்டிருந்தார்.

ஜிகித்சா ஹெல்த் கேர் நிறுவனத்தால் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் 2013ம் ஆண்டு அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன் இவ்வழக்கை விசாரித்த சிபிசிஐடி, விசாரணை அடிப்படையில் முன்னாள் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.ஏ.கான், கேரள முதல்வர் உமன் சாண்டிக்கு பொருளாதார ஆலோசகராக இருந்த ஷாப்பி மாதர் ஆகியோரின் பெயர்களை இதில் சேர்த்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வசுந்தரா அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கார்த்தி சிதம்பரம், சச்சின் பைலட் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தில் சிபிஐ தனது விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.