Show all

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, உள்நாட்டு போபர்ஸ் எனப்படும், தனுஷ் பீரங்கிகள்...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'உள்நாட்டு போபர்ஸ்' எனப்படும், ஹோவிட்சர் வகையை சேர்ந்த, நவீன, 'தனுஷ்' பீரங்கிகள், வரும் நவம்பரில், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

கடந்த 1987ல், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த, போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து, பீரங்கிகள் வாங்கப்பட்டன. அப்போது, அதன் தொழில் நுட்பத்தையும், இந்தியாவுக்கு தரவேண்டுமென, ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அத்தொழில் நுட்பம் உடனடியாக இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை. சிறிது கால இடைவெளிக்கு பின், 12,000 பக்கங்கள் உள்ள, பீரங்கி தயாரிப்புக்கான வடிவம் மற்றும் செய்முறை குறித்த, ஆவணங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டன.

இதை அடிப்படையாக வைத்து, கோல்கட்டாவில் உள்ள, ஓ.எப்.பி., எனப்படும், ஆயுத தளவாட தொழிற்சாலை வாரியம், பல்வேறு சிறப்பு அம்சங்களை சேர்த்து, தற்காலத்துக்கு ஏற்ற, நீண்ட தூரம் தாக்கக்கூடிய, நவீன, 'ஹோவிட்சர்' வகை பீரங்கியை தயாரித்துள்ளது.

இதற்கு, 'தனுஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது; உள்நாட்டு போபர்ஸ் எனவும் இதை அழைக்கின்றனர்.

இதுகுறித்து, துப்பாக்கி கேரேஜ் தயாரிப்பு தொழிற்சாலை பொது மேலாளர் என்.கே.சின்கா கூறியதாவது: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள, தனுஷ் பீரங்கி, 155 எம்.எம்., மற்றும் 45 காலிபர் திறன் கொண்டது. வரும் நவம்பரில், ராணுவத்திடம் பீரங்கிகள் ஒப்படைக்கப்படும். இப்பீரங்கி மூலம், 38 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்க முடியும். ஒரு பீரங்கியின் விலை, 14 கோடி ரூபாய். பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன பீரங்கிகளுடன் இதை ஒப்பிடலாம். இவ்வாறு சின்கா கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.