Show all

பா.ம.க.வேட்பாளர் அ.சரவணன் தோல்வி அச்சத்தில் களமிறங்க திடீர் மறுப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் பா.ம.க.வேட்பாளர் அ.சரவணன் அத்தொகுதியில் களமிறங்க திடீரென மறுத்துள்ளார்.

பாலக்கோடு தொகுதியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலர் அ.சரவணன் போட்டியிடுவர் என பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இதேபோல , தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். மேலும் தருமபுரி தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் சத்தியமூர்த்தி, அரூர்(தனி) தொகுதியில் முரளி சங்கர் போட்டியிடுகிறார்.

ஆனால் பாலக்கோடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அ.சரவணனைத் தவிர, மற்ற அனைவரும் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டனர். ஆனால், இவர் இதுவரை தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்.

தருமபுரி பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரியபோது, பாமக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், நடைபெற உள்ள 2016 தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட அவர் விருப்பு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு பாலக்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், தொகுதி மாறி போட்டியிட தனக்கு விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் பொருளாதார பலமிக்க வேட்பாளர் போட்டியிடுவதால், தன்னால் அங்கு எளிதாக களமிறங்க முடியாது. எனவே, நான் தேர்தல் பணியை மட்டும் தொடர்ந்து செய்கிறேன். அந்த தொகுதிக்கு வேறொருவரை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தியுள்ளேன் என்றார். இதனால் பாலக்கோடு தொகுதிக்கு மாற்று பாமக வேட்பாளர் அறிவிக்கும் முயற்சியில் பா.ம.க. உள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.