Show all

வரலாற்றுத் திருப்பமாக, உத்தரகண்ட் மாநிலக் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து

உத்தரகண்ட் மாநில அரசியலில் மற்றொரு திடீர் திருப்பமாக, அங்கு அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும்,வரும் 29ஆம் தேதி, ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, உத்தரகண்ட் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி, உத்தரகண்ட் சட்டப்பேரவையைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைத்ததை எதிர்த்து, அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி வி.கே. பிஷ்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில், கடந்த மாதம் 18ஆம் தேதி, ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நிதி ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முயன்றபோது, அரசின் பெரும்பான்மை பலம் குறித்த பிரச்னை எழுந்தது. இந்தப் பிரச்னை எழுந்த 10 நாள்களுக்குள் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

நடுவண் அரசின் இந்த நடவடிக்கை, அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளது. அத்துடன், உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு, வலுவான அடிப்படைக் காரணங்கள் எதுவுமில்லை.

மேலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கவிழ்க்கும் நடுவண்அரசின் இந்தச் செயலை அனுமதித்தால்

அது, ஜனநாயகத்தின் மீதான குடிமக்களின் நம்பிக்கையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் குலைப்பதாக அமைந்துவிடும். எனவே, உத்தரகண்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்படுகிறது.

இதையடுத்து, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெறும் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, வரும் 29ஆம் தேதி, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,

உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தாற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்று நடுவண்அரசு தரப்பு வழக்குரைஞர் கோரினார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்,

நீங்கள் (நடுவண்அரசு) வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.

முன்னதாக, காங்கிரஸ் அதிருப்தி சட்டமன்ற உறுப்பனர்கள் 9 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து நீதிபதிகள் குறிப்பிட்டபோது, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ், காங்கிரஸ் அதிருப்தி சட்டமன்ற உறுப்பனர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான். இதன் மூலம் அவர்கள், தாங்கள் செய்த பாவத்துக்கான (கட்சித் தாவல்) விலையைக் கொடுத்துள்ளனர் என்றனர்.

பரபரப்பான அரசியல் சூழலில், டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் ஹரீஷ் ராவத், செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்; இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். நடுவண் அரசுடன் நாங்கள் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. எனவே, இதுவரை நடந்தவற்றையெல்லாம் மறந்து, கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட, மோடி தலைமையிலான நடுவண் அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஹரீஷ் ராவத் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியபோது உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைத்ததன் மூலம், அங்கு ஜனநாயகத்தைப் படுகொலை செய்த குற்றத்துக்காக மோடியும், அமித் ஷாவும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.

இதனிடையே, பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கீய கூறியபோது, இந்தத் தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்ததுதான்; ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசு இன்றும் பெரும்பான்மை இல்லாத (மைனாரிட்டி) அரசுதான். எங்களது இந்தக் கூற்று உண்மை என்பது, வரும் 29ஆம் தேதி உத்தரகண்ட் பேரவையில் நிரூபணமாகும் என்றார்.

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்றதன்மையை உருவாக்கியதற்காக, மோடி தலைமையிலான நடுவண் அரசைக் கண்டித்து, மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கோரி, மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியிடம், மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று நடுவண் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.