Show all

விஜய் மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடு சென்றுவிட்ட மாநிலங்களவை உறுப்பினர் விஜய் மல்லையா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரிக்கு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

 

தொழிலதிபரான விஜய் மல்லையா, கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு சுயேட்சை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளிடம் ரூ.9,400 கோடியை கடனாகப் பெற்றுக் கொண்டு திரும்பச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு சென்றுவிட்டார் மல்லையா.

 

இந்நிலையில் கடந்தவாரம் கூடிய மாநிலங்களவை நெறிமுறைகள் குழு, அதில் மல்லையாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பறிக்க பரிந்துரை செய்தது. இதனிடையே, மல்லையாவை திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்தை  இந்தியா வலியுறுத்தியது.

 

கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு அரசின் சார்பில் கடிதம் எழுத்தப்பட்டது.

 

இந்நிலையில் திடீர் திருப்பமாக, விஜய் மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக, மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.