Show all

ஜல்லிக்கட்டு நடத்த இதோ ஆணை வருகிறது, அதோ சட்டத் திருத்தம் வருகிறது

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சூழல் உருவாகாமைக்கு, பாஜகவும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் கிராமப் புறங்களில் பொங்கல் திருவிழா சமயத்தில் ஜல்லிக்கட்டு என்கிற பாரம்பரிய விளையாட்டு காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் திருவிழாவில் மாட்டுப் பொங்கல் அன்று விவசாயத்திற்கு பயன்படும் காளை மாடுகளை மையமாக வைத்து வணங்கிப் போற்றுவது அதன் சிறப்பாக இருந்தது. அதே நேரத்தில் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் அதற்கு எதிரான கருத்துக்களைத் திரட்டுவது, நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது என பலமுனைகளில் செயல்பட்டு வந்தனர்.

இதனடிப்படையில் இந்திய விலங்குகள் வாரியத்தின் பொறுப்பில் இன்றைய நடுவண் அமைச்சர் மேனகா காந்தி இருந்த போது தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு குறித்து கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தார்.

தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிக்க வேண்டுமென்றும், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடுத்தனர்.

அந்த வழக்கு கடந்த மே 7, 2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் நடுவண் அரசின் 11.7.2011 ஆம் நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை செல்லுபடியாகும் என்று கூறியது.

இதற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதன் மூலமாகத்தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடந்த 18 மாதங்களாக மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு என்ன முயற்சிகளை மேற்கொண்டது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு அக்கட்சிக்கு இருக்கிறது.

அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் 37 பேரும், மாநிலங்களவையில் 11 பேரும் ஆக 48 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு கடந்த 18 மாதங்களாக ஜல்லிக்கட்டு நடத்த சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு என்ன முயற்சிகளைச் செய்தார்கள் என்பதை தமிழக மக்களுக்கு ஜெயலலிதா விளக்க வேண்டும்.

அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளர் எச். ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்த இதோ ஆணை வருகிறது, அதோ சட்டத் திருத்தம் வருகிறது என்று வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று நாள்தோறும் ஊடகங்களில் கூறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய பிரச்சாரத்தை பாஜகவினர் செய்து வருகிறார்கள்.

நில கையகப் படுத்துதல் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து 5 முறை நீட்டித்த பாஜக இன்றைக்கு தமிழக மக்களின் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர என்ன தயக்கம்?

தமிழகம் இன்னும் சில நாட்களில் பொங்கல் திருவிழா கொண்டாட இருக்கிறது. இத்தருணத்தில்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சூழலை உருவாக்கவில்லை என்று சொன்னால் அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பாஜகவும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற அரசும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.