Show all

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த மதுரை பெண்

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண் தீக்குளிக்கப் போவதாக சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை செல்லூரைசேர்ந்தவர் ரவி. வளையல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நாகஜோதி (அகவை40). இவர்களுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது. அந்த வீட்டை நாகஜோதியின் உறவினர் சிவராமன் என்பவர் ரூ.5 லட்சத்திற்கு ரவியிடம் இருந்து எழுதி வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகஜோதி செல்லூர் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு இருந்தார். அங்குவந்த நாகஜோதி மாவட்ட ஆட்சியரிடம் மனுவைக் கொடுத்தார். அப்போது திடீர் என்று தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை மேசை மீது வைத்து மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்து நீதி வழங்கவேண்டும். இல்லை என்றால் தீக்குளிப்பேன் என்று அவர் கூறினார். அதைபார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் நாகஜோதியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை வாங்கிக் கொண்டு அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். உடனே மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அங்கிருந்த காவல்துறையினரை அழைத்து மனு கொடுக்க வருபவர்கள் முன்பெல்லாம் அலுவலகத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கூட்ட அரங்கிற்குள்ளேயே ஒரு பெண் மனு கொடுப்பது போன்று போராட்டம் நடத்த வந்து விட்டார். நீங்கள் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாகச் செயல்படக் கூடாது என காவல்துறையினரை எச்சரித்து அனுப்பினார். அதன் பின்பு காவல்துறையினர் கூட்ட அரங்கிற்கு வந்தவர்களைச் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் பெண் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.