Show all

கங்கை நீரை ஊற்றி கழுவிய பாஜகவினர்! சாஸ்திரி நினைவிடத்துக்கு பிரியங்கா வந்து சென்றதால்

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி வந்து சென்றதால் சாஸ்த்ரி நினைவிடத்தை கங்கை நீரால் பாஜகவினர் சுத்தம் செய்துள்ளனர். இது உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (அகமதாபாத்) நகரில் இருந்து வாரணாசி வரை 100 கிலோ மீட்டர் தூரம் வரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி படகில் பயணித்து கருத்துப்பரப்புதல் மேற்கொண்டார். கங்கை கரையோரத்தில் வசிக்கும் மக்களிடம் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக வாக்கு கேட்டார்.

அதன் பின்னர் வாரணாசி வந்தடைந்த பிரியங்கா காந்தி, அங்கு ராம்நகரில் உள்ள முன்னாள் தலைமைஅமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்துக்கு சென்று சில நிமிடங்கள் நின்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி வந்து சென்ற பின்னர், பாஜக தொண்டர்கள் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தை கங்கை நீரை ஊற்றி கழுவி விட்டார்கள். இதனிடையே பாஜகவினரின் இந்த செயல் கேவலமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜகவினரின் சேட்டை அணைகின்ற விளக்கு போல ரொம்ப அதிகமாகி விட்டது. கங்கையில் மூழ்கி எழுந்தால் கதி மோட்சம் கிட்டும் என்பார்கள். ஆனால், கங்கையில் குளித்தாலே தீராத நோய்கள் வந்து மரணமடையும் நிலை உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு கங்கை முழுவதும் மனித உடல்களும் சாம்பலும் எலும்புகளும் மலமும் கழிவுநீரும் மிதக்கின்றன. உலகிலேயே அதிகமான மாசுள்ள ஆறாக இன்று கங்கை மாறிவிட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்தக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தலைமைஅமைச்சர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் மனுவை பதிகை செய்ய வாரணாசி தொகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர், 'நானாக இங்கு வரவில்லை. கங்கை அன்னை அழைத்துத்தான் வந்தேன்' என்று தெரிவித்தார். 

இன்னும் ஐந்தாண்டுகளில் கங்கை அன்னைக்குச் சேவை செய்து அதை தூய்மைப்படுத்துவதே தனது வாழ்நாள் லட்சியம் என்றும் உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டார். கங்கையைப் புனித ஆறாகக் கருதும் கோடிக்கணக்கான ஹிந்துக்கள் இதை நம்பினர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. உச்ச அறங்கூற்றுமன்றமே பலமுறை கண்டித்தும் இன்னும் கங்கையில் எப்போதும் போல அசுத்தங்களும் மாசுக்களும் அழுகிய பிணங்களும் மிதக்கின்றன.

ஹிந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் கங்கை புனித ஆறாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர்த்து கங்கை பல முதன்மை அம்சங்களைக் கொண்டுள்ளது. நாட்டிலேயே மிகப் பெரிய ஆறான கங்கை, இமயத்திலிருந்து உற்பத்தியாகி 2,525 கிமீ தொலைவு பாய்ந்து ஓடுகிறது. நாட்டின் 40 விழுக்காடு மக்கள் கங்கையினால் பயனடைகின்றனர். நாட்டுக்குப் பெரிய அளவில் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல்ரீதியாகவும் முதன்மைத்துவம் பெற்றதாக இந்த ஆறு திகழ்கிறது.

கங்கையைத் தூய்மைப்படுத்த முன்னதாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை. இதற்காகக் கோடிக்கணக்கான பணம்தான் வீணாகியது. 

மோடி தலைமைஅமைச்சர் ஆனதும் நமாமி கங்கைத் திட்டத்தை அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி கங்கையிலுள்ள உயிரியல்ரீதியான அசுத்தங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். அதனையொட்டியுள்ள கிராமங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஆற்றின் படுகையில் காடுகள் வளர்க்க வேண்டும். கங்கை பாயும் மாநிலங்களான உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்கம் ஆகியவற்றில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், இவை நடக்கவில்லை.

இந்த மாநிலங்கள் அனைத்தும் நாளொன்றுக்கு 12,000 லிட்டர் கழிவுநீரை கங்கையில் கொட்டிவருகின்றன. ஆனால் , திட்டத்தின்படி அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலைகளால் நாளொன்றுக்கு 1,000 லிட்டர்தான் சுத்திகரிக்க முடியும். கங்கையிலுள்ள 80 விழுக்காடு மாசானது சுத்திகரிக்கப்படாதது. இதில் 20 விழுக்காடு உத்தரப் பிரதேசத்திலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கரும்பு, காகிதத் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் கொட்டப்படுபவையாகும்.

மோடி இந்தத் திட்டத்தை அறிவித்து நான்காண்டுகளாகிவிட்டன. ஆனால், கங்கையோ எப்போதும் போல அசுத்தம் நிரம்பி வழிவதாகவே உள்ளது.

கழிவுகளில் உருவாகும் ஒருவித கிருமிகளின் அளவும் மிக அதிகமாக இருந்துவருகிறது. இந்தக் கிருமிகளின் அளவு 3,000 ஆக இருந்தது. ஆற்றின் இறங்குமுகத்தில் அது 46,167 ஆக இருந்தது. ஒரு ஆற்றில் பாதுகாப்பாகக் குளிக்க வேண்டும் என்றால் அந்;த ஆற்றில் கிருமிகளின் அளவு 100 மில்லிலிட்டருக்கு 500க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

நடுவண் கணக்குத் தணிக்கை அமைப்பின் அறிக்கையின்படி நதியில் மிதக்கும் மலத்திலிருந்து வரும் கிருமிகளின் அளவு ஆறிலிருந்து 334 மடங்கு வரை இருப்பதாகக் கூறியுள்ளது. இது மிகவும் அபாயகரமான அளவாகும். இதன் விளைவாக தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் கங்கை நதியைப் பயன்படுத்த வேண்டாம், அதனால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகளை வைப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று நடுவண் அரசுக்கு ஆலோசனை கூறியது.

நமாமி கங்கைத் திட்டம் என்று கொண்டுவரப்பட்ட திட்டத்துக்கு ரூ.20,601 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி இதன் கீழ் அமல்படுத்தப்படவுள்ள 193 சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இதில் 20 விழுக்காடுதான் அதாவது ரூ.4,254 கோடிகள்தான் செலவழிக்கப்பட்டுள்ளன. இதற்காக 4031.41 கிமீ தொலைவுக்குக் கழிவுநீர்ப் பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டன. ஆனால், 1114.75 கி.மீ தொலைவுதான் இப்பாதை அமைக்கப்பட்டது. கழிவுநீர்ப் பாதைகள் அமைக்கப்படாததால் மிகப் பெரிய அளவில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மாசுக்களும், வேதியியல் பொருட்களும், இறந்தவர்களின் சடலங்களும் மலங்களும் குவியல் குவியலாக மிதக்கின்றன. இந்நிலைமை நமாமி கங்கைத் திட்டம் தொடக்க நிலையிலேயே உள்ளது என்பதைக் காட்டுகிறது.

இதைத் தவிர, புனித நகரமான வாரணாசி, கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் அதிக கவனத்திற்குரியதாக இருந்தது. ஏனென்றால் இங்கிருந்துதான் பெருமளவில் அசுத்தங்கள் கங்கையில் கொட்டப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 33,000 உடல்கள் கங்கையின் கரைகளில் சிதை மூட்டப்படுகின்றன. அதற்காக 16,000 டன் மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, 900 டன் சாம்பல் கங்கையில் கொட்டப்பட்டுக் கரைக்கப்படுகிறது. இத்துடன் பாதி எரிந்த உடல்களும் கங்கையின் கிளைகளான ஹரிச்சந்திரா, மணிகர்ணிகா ஆகியவற்றில் மிதக்க விடப்படுகின்றன என்று பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கங்கை ஆற்;றுக் கண்காணிப்பு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் பிடி திருப்பதி கூறுகிறார். அண்மையில் ப்ரன்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

47 ஆண்டுகளாக கங்கையை ஆய்வு செய்துவரும் திருப்பதி, தேசிய கங்கை ஆற்றுப் படுகை அமைப்பில் உறுப்பினராகவும் இருந்துவருகிறார். இவ்வமைப்பானது மன்மோகன் சிங்கால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அப்போது சடலங்களை மிதக்கவிடும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த கட்டுமானத்தை உருவாக்குவதாக அரசு கூறியது. ஆனால் இப்பிரச்சினையைச் சமாளிக்க ஒரே ஒரு மின்மயானம்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் சரிவர செயல்படுவதில்லை. எனவே கங்கையைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறுவது வெறும் கருத்துப் பரப்புதலாகவே உள்ளது. அதற்கு மேல் அங்கு ஒன்றும் நடப்பதில்லை. கங்கை நீரானது மேலும் மேலும் மோசமான தரத்துடன்தான் நீடிக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இது தவிர, கங்கையின் நீரோட்டம் குறைந்தால் நீரோட்டத்தில் மாசுக்கள் அதிகமாக அடித்துச் செல்லப்படாமல் தங்கிவிடுகின்றன. இதனால் மாசுக்கள் பல மடங்கு பெருகிவிடுகின்றன. ஆனால், அவற்றைச் சுத்திகரிப்பதற்கான கட்டுமானங்களோ 33ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டவைதான். அதற்குப் பின்னர் எந்த வசதியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறுகிறார் திருப்பதி. இந்த மாசுக்கள் குறைய வேண்டுமானால் அடித்துச் செல்லப்பட வேகத்துடன் கூடிய நீரோட்டம் தேவை என்றும் அவர் கூறுகிறார்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தின் மின்னணுத் துறையின் பேராசிரியரும் சங்கத் மோச்சன் அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான வி.என்.மிஸ்ரா, கங்கை நீரின் தரத்தைக் கடந்த 30 ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறார். நமாமி கங்கைத் திட்டமானது வெற்று முழக்கமாகி விட்டது. அதனால் நீரின் தரம் உயரவில்லை என்கிறார் அவர்.

அறக்கட்டளை சேகரித்த தகவல்களின்படி மூன்று ஆண்டுகளுக்கு முன் கங்கையில் மிதக்கும் மலத்திலுள்ள கிருமிகளின் அளவு 100 மில்லிலிட்டருக்கு 41,00,000ஆக இருந்துள்ளது. கங்கை வருணா ஆற்றுடன் கலக்கும் இடத்தில் 100 மிலிட்டருக்கு 53,00,000ஆக இருந்துள்ளது. ஆசி, வருணா ஆகிய ஆறுகள் நகரின் வழியாகச் செல்வதால் நகரின் கழிவுகளையும் கங்கையில் கொண்டு சேர்க்கின்றன.

பேராசிரியரின் கூற்றுப்படி இந்தப் பிரச்சினைக்கு அரசு நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வு எதையும் மேற்கொள்ளவில்லை. வாரணாசி நகரில் கழிவுநீர் ஓடும் பாதைகள் கடந்த 100 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. இன்னொரு பாதை கட்டப்பட்டு வருகிறது. ஆனால், கங்கையின் நீரோட்டத்திற்கேற்ப அது கட்டப்படவில்லை. இன்னொரு பக்கம் மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. அதனால் அந்தக் கழிவுநீர்ப் பாதைகளும் குழாய்களும் எப்போது முறையாக இயங்கப் போகின்றனவோ தெரியவில்லை.

கங்கையில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் தீரும், மோட்சம் கிட்டும் என்னும் நம்பிக்கை பெரும்பாலான ஹிந்துக்கள் நடுவே ஆழமாக உள்ளது. இன்று கங்கை இருக்கும் நிலையில் அதில் மூழ்கிக் குளித்தால், உயிரையே குடிக்கும் நோய்கள் வரக்கூடிய நிலையில்தான் இந்த வற்றா ஆறு உள்ளது. அந்த அளவு கடுமையான அசுத்தங்களையும் மாசுக்களையும் அது சுமந்துவருகிறது. கங்கையில் மூழ்கினால் 'கதி மோட்சம்' ஏற்படும் என்பது இந்த வகையில் யதார்த்தமாகி வருகிறது.

கங்கையைத் தூய்மைப் படுத்த வக்கில்லாமல், கங்கை நீரைக் கொண்டு இந்தியாவை தூய்மைப் படுத்தும், தேவையில்லாத சேட்டைகளை மேற்கொண்டு வருகின்றனர் பாஜகவினர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.