Show all

தே.மு.தி.க. முப்பெரும் விழா கோவை கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் நடந்தது.

தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்க விழா,

விஜயகாந்த் பிறந்த நாளான வறுமை ஒழிப்பு தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் நடந்தது.

விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. கட்சி உருவானது.

அன்று முதல் இன்று வரை தெய்வத்தையும், மக்களையும் நம்பித்தான் கட்சி நடத்துகிறேன். தெய்வம் நேரடியாக வராது. மக்கள் மூலமாகத் தான் வரும். அதனால், எப்போதும் மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன்.

ஜெயலலிதா குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் போராட்டங்களை நடத்துகின்றனர்.

அவர்கள் இளங்கோவன் குறித்து பேசியதைக் காது கொடுத்து கேட்க முடியாது. அதை ஏன் ஜெயலலிதா தட்டிக்கேட்கவில்லை.

ஜெயலலிதா பொறுப்பேற்று 4½ ஆண்டுகளுக்குப் பிறகு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். அதில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல் ரூ.2 லட்சத்து 42 அயிரம் கோடி முதலீடு எப்படி வரும். இந்த திட்டத்துக்கு மந்திரி சபையில் ஒப்புதல் வைத்து அறிவிப்பதற்கே 2 மாதம் ஆகும். அதற்குள் ஆட்சி முடிந்து விடும். எனவே, ஜெயலலிதா இதுபோன்ற ஒரு பொய்யை மக்களிடம் சொல்ல வேண்டாம்.

தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் கட்சி பாகுபாடின்றி, முதல்-அமைச்சரான நீங்கள் நல்லது செய்தால் நான் கட்சியை கலைத்து உங்கள் கட்சியில் இணைக்க தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்கு நல்லது செய்யத்தான் கட்சியை நடத்தி வருகிறேன்.

நான் ஜாதி, மொழியை கடந்து கட்சியை நடத்தி வருகிறேன். எனவே வருகிற 2016-ம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது. கூட்டணி குறித்து இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தாலே போதும்.

இவ்வாறு அவர் பேசினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.