Show all

இணையப் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதி

இணையப் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் இணையத்தின் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

அதன்படி, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையதளத் தொடர்புகளை அளிக்கக்கூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்படும்.

தரையிலிருந்து அவற்றின் பாதை கட்டுப்படுத்தப்படும்.  இதன்மூலம், இதுவரை இணையதள வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள்  வசதி பெறமுடியும்.

இந்தத் திட்டம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில் நாடுகளைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்தோனேசியாவில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத் திட்டம் இந்தியாவிலும் செயல்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. பலூன் மற்றும் சூரிய மின்சக்தியில் இயங்கும் 8 மிகப் பெரிய ஆளில்லா விமானங்கள் மூலம் இத்திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த நடுவண் அரசிடம் அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில், பலூன் மூலம் இணையவசதியை வழங்கும் இந்தத் திட்டத்தைச் சோதனை அடிப்படையில்  மட்டும் செயல்படுத்த நடுவண் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக கூகுள் நிறுவனம் நடுவண் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் என்றும், திட்டத்தை செயல்படுத்த ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.