Show all

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு தொடரும் எதிர்ப்புகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், இந்தியாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாறும் ஆபத்து உள்ளதாகவும் எனவே நாட்டு மக்களை ஒன்று திரட்டி இதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் இலங்கை தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் கலாநிதி வசந்த பண்டார எச்சரித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை முன்னெடுக்க சீனாவுக்கு அனுமதி அளித்துள்ளதால், இலங்கை அரசாங்கம், இந்தியாவின் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் இரகசியமாக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. அந்த இரகசிய வாக்குறுதியே அமைச்சர் கபீர் காசிம் மூலம், இந்தோனேசியாவில் வெளியாகியுள்ளது. பாலம் அமைப்பதற்கு மட்டுமல்ல, அதன் பின்னர் திருகோணமலையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 126 கி.மீ தூரத்திற்கான தொடர்வண்டி பாதையும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் திருகோணமலையிலிருந்தும் இந்தியாவிலிருந்து பொருட்கள் கப்பல்கள், படகுகள் மூலம் வருவதற்குப் பதிலாக தொடர்வண்டி மூலம் வர தொடங்கும். அத்துடன் இந்தியாவிலிருந்து ஆட்களும் இங்கு வருவார்கள். திருகோண மலையில் எஞ்சியுள்ள எண்ணெய்க் கிணறுகளும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே பாலம் அமைக்கப்பட்டு, பூகோள ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது அது இலங்கையை பாதிக்கும். சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் இலங்கையில் நெருக்கடிகள் பிரச்சினைகள் தலைதூக்கும். கலாசார ரீதியில் சீரழிவுகள் ஏற்படும். இலங்கை அரசின் இந்த முடிவு நாட்டை பயங்கரமாக பாதிக்கும். எனவே இத்திட்டத்திற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. இதனால் இந்தியாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாறுவதையும் தடுக்க முடியாது. எனவே நாட்டு மக்களை திரட்டி இதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.