Show all

திருப்பதி கோயிலுக்கு சென்ற 10 தமிழர்கள் பொய் வழக்கில் கைது

திருப்பதி கோயிலுக்கு சென்ற 10 தமிழர்கள் மீது ஆந்திரக் காவல்துறையினர் செம்மரக் கட்டை கடத்துவதாகப் பொய் வழக்குப் போட்டுக் கைது செய்வது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

     தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் அம்பலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்ற கோபால், ராவுத்தன் என்ற முருகன், சுடலை, வேல்முருகன், சிவபெருமாள், சரவணன், ராதாகிருஷ்ணன், பாலா, சுடலை, கார் டிரைவர் கண்ணன் ஆகிய பத்து தமிழர்கள், ஆலய வழிபாட்டுக்காகக் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு காரில் புறப்பட்டனர்.

 

தஞ்சை பெரிய கோவில், திருவரங்கம், சமயபுரம் மாரியம்மன், திருவண்ணாமலைக் கோயில்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திருப்பதி சென்றுள்ளனர். அங்கே வழிபாட்டை முடித்துக்கொண்டு திரும்புகையில் பிப்ரவரி 16 ஆம் மாலை ஐந்து மணி அளவில், ரங்கம்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திரக் காவல்துறையினர் அவர்களை வழிமறித்துள்ளனர்.

 

அவர்களைக் காரில் இருந்து கீழே இறக்கி, எதுவும் பேசவிடாமல் சரமாரியாக அடித்துத் துன்புறுத்தி, காருக்கு முன்னால் மண்டியிட்டு உட்கார வைத்துள்ளனர். காவல்துறையினர் கொண்டு வந்த செம்மரக் கட்டைகளை அவர்களுக்கு முன்னால் அடுக்கி வைத்து, செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகப் பொய்வழக்குப் போட்டு, 17 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

அதன்பிறகு, ஆந்திர வனத்துறை அதிகாரி ஒருவர் சுடலையின் அண்ணன் காளிமுத்துவிடம், பத்து பேர் சிறையில் அடைக்கப்பட்ட தகவலைக் கூறி உள்ளார். அப்பொழுது அதே அலைபேசியில் பேசிய சுடலை, தங்களை ஆந்திர வனத்துறையைச் சேர்ந்த காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தி, செம்மரக் கட்டைகளை நாங்கள் கடத்தியதாக ஒப்புக்கொள்ளுமாறு கடுமையாகத் தாக்கினார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தபொழுதே, காவல்துறையினர் அலைபேசியைப் பிடுங்கி இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

 

அந்த ஒரு காரில் பத்து பேர்கள் நெருக்கியடித்து உட்காரவும், அவர்களுடைய உடைமைகளுக்கான இடம் கூட இல்லாத நிலையில், செம்மரக் கட்டைகளைக் கடத்திக் கொண்டு வருவதற்கு இடம் எது?

 

கடந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்களான தமிழர்களை, ஆந்திர வனத்துறை காவல்துறையினர் பேருந்துகளில் இருந்து இறக்கிக் கடத்திச்சென்று, கொடூரமாகச் சித்திரவதை செய்து சுட்டுப் படுகொலை செய்த கொடுமை நடைபெற்றது. அந்தப் படுகொலைகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்காக, அதன்பிறகு தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்குச் செல்லுகின்ற அப்பாவித் தமிழர்கள் மீது ஆந்திரக் காவல்துறையினர் செம்மரக் கட்டை கடத்துவதாகப் பொய் வழக்குப் போட்டுக் கைது செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

 

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; அங்கே அவர்கள் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இன்று அதே நிலைமைதான் இந்தியாவின் ஒரு மாநிலமான ஆந்திரத்திற்குள் ஆலய வழிபாட்டுக்குச் செல்லுகின்ற தமிழர்களுக்கும் ஏற்பட்டு இருக்கின்றது. தமிழர்களை அடித்தாலும் கொன்றாலும் கேள்வி கேட்க நாதி இல்லை என்ற நிலை சொந்த நாட்டுக்கு உள்ளேயே ஏற்பட்டு விட்டது.

 

தமிழர்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், 20 தமிழர்களைப் படுகொலையில் ஆந்திர அரசுக்கு முழுக்க முழுக்க உடந்தையாக தமிழக அரசு செயல்பட்டதன் விளைவுதான், தொடர்ந்து கொடுமை செய்யும் துணிச்சலை ஆந்திரக் காவல்துறைக்குக் கொடுத்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பத்து தமிழர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்த அநீதியான கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஆந்திர அரசுக்கும் காவல்துறையினருக்கும் கடுமையான கண்டனம் தெரிவிப்பதோடு, திருப்பதி வழிபாட்டுக்குச் சென்ற இந்தப் பத்து தமிழர்களையும் உடனடியாக விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.