Show all

மனைவியைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்ததால், ஒரு கிணற்றை வெட்டிய கணவர்

தாழ்த்தப்பட்டவர் என்பதால் மனைவியைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்ததால், அவரது கணவர் தனியாக ஒரு கிணற்றை வெட்டி, அதிலிருந்த வந்த தண்ணீரை ஊரார் அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

 

மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டம், கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், கூலித்தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் இவரது மனைவி ஊரில் இருந்த உயர் வகுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது கிணற்றின் உரிமையாளர், தண்ணீர் எடுக்க கூடாது என கூறியிருக்கிறார்.

 

இதையடுத்து, அவர் அழுது கொண்டே வீட்டிற்கு வந்திருக்கிறார். மனைவி அழுவதை பார்த்து விரக்தி அடைந்த பாபுராவ், தனது வீட்டிற்கு அருகில் தனியாக கிணறு வெட்ட ஆரம்பித்திருக்கிறார்.

 

பாபுராவ் வெட்டிய கிணற்றுக்கு அருகில் ஏற்கனவே 3 கிணறுகளும், ஒரு ஆழ்துளை கிணறும் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்திருக்கிறது. இதனால், பாபுராவை அவரது மனைவி உள்பட உறவினர்கள் அனைவருமே விமர்சனம் செய்ததோடு, யாரும் கிணறு வெட்ட உதவியும் செய்யவில்லை.

 

 

 

இருப்பினும், மனம் தளராத பாபுராவ், தினமும் வேலைக்கு செல்வதற்கு முன் 4 மணி நேரமும், வேலை முடிந்து வந்த பின் 2 மணி நேரமும் கிணறு வெட்டியிருக்கிறார். விடா முயற்சியாக பாபுராவ் வெட்டிய கிணற்றில் 40 நாளில் தண்ணீர் வந்திருக்கிறது. அதுவும் அதிகமான தண்ணீர் ஊற்றெடுத்திருக்கிறது.

 

இப்போது அந்தக் கிணற்றில் இருந்து தாழ்த்தப்பட்டவர் மட்டுமின்றி, உயர் சாதியினரும் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.

 

இதுகுறித்து பாபுராவ் கூறுகையில், எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த உரிமையாளர் பெயரை கூற விரும்பவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் தண்ணீர் மறுக்கப்பட்டது. இதனால், எப்படியாவது தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி கடவுளை மட்டுமே நினைத்து வேண்டிவிட்டு, பக்கத்து ஊருக்கு சென்று கிணறு வெட்டும் பொருட்களை வாங்கி வந்தேன்.

 

எனது வேண்டுதலின் பயனாக கடவுள் இந்த இடத்தில் தண்ணீர் வர வைத்து இருக்கிறார். இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, உயர் சாதியினரும், எங்களுக்கு தண்ணீர் தர மறுத்தவர்களும் இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர் என்றார்.

 

 

 

இந்தத் தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்ததும், தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். அதோடு, எந்தவிதமான உதவியும் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

 

தனி ஒருவராக நின்று 40 நாட்களாக கடுமையான உழைப்பின் மூலம் கிணறு வெட்டி, இன்று ஊருக்கு தண்ணீர் வழங்கும் பாபுராவ் தஜ்னேவை பார்த்து ஊரார் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.