Show all

வேளாண்கடன்கள் தள்ளுபடி! முதல்வராக பதவியேற்ற கமல்நாத்தின் முதல் கையெழுத்து

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் உழவர்கள் பிரச்னையை முதன்மைப் பிரச்னையாக முன்னிறுத்தி காங்கிரஸ் கருத்துப் பரப்புதல் செய்தது.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனையடுத்து, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆதரவு அளித்ததையடுத்து, காங்கிரஸ் ஆட்சியமைக்க, கமல்நாத்தை முதல்வராக ராகுல் காந்தி தேர்ந்தெடுத்தார். அதனையடுத்து, இன்று கமல்நாத் முதல்வராகப் பதவியேற்றார். ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முதல்வராக பதவியேற்ற கமல்நாத் உடனடியாக, உழவர்களின் கடன்களை ரத்து செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

இதன்மூலம், உழவர்கள் வாங்கியிருக்கும் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் உழவர்கள் பிரச்னையை முதன்மைப் பிரச்னையாக முன்னிறுத்தி காங்கிரஸ் கருத்துப் பரப்புதல் செய்தது. மேலும் மூன்று மாநிலங்களிலும் வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்ற கமல்நாத், முதல் கையெழுத்தாக வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,005.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.