Show all

ஆளுநர் பன்வாரிலால் முடிவாம்! பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை இல்லையாம். ரவிச்சந்திரன் மடலை பார்த்தும் கூடவா?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே சமயத்தில் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் எழுவரில் ஒருவரான மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், தங்களின் விடுதலை குறித்து தலைமை அமைச்சர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 


01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் 7 பேரும் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மனு செய்தனர்.

ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை உதாரணமாக கூறி அது போன்று தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அந்த மனு மீதான விசாரணை பதினான்கு மாதங்களுக்கு முன்பாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நடந்தது.

அப்போது, “ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம். அரசியல் சட்டப்பிரிவு 161-வது பிரிவை பயன்படுத்தி ஆளுநர் இதில் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது” என்று உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். இதனால் இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அதிமுக அரசு சட்டமன்றத்தில் ஏற்கனவே ஒரு தடவை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. உச்ச அறங்கூற்றுமன்றத்தின் புதிய உத்தரவைத் தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை கூடி இது தொடர்பாக விவாதித்தது.

கூட்டத்தில் “ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் 161-வது பிரிவின்கீழ் முடிவு எடுக்க வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த அமைச்சரவை தீர்மானம் உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்கள் விடுதலை தொடர்பாக பன்வாரிலால் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. சட்ட நிபுணர்களையும் அழைத்து பன்வாரிலால் கருத்து கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் எந்தவித கருத்தையும் வெளியிடாமல் இருந்தார்.

ஆளுநர் பன்வாரிலாலுக்கு, தமிழக அமைச்சரவை கோரிக்கை விடுத்து ஓராண்டு கடந்து விட்டது. எனவே ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்கள் தொடர்பில் ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ் கொலை குற்றவாளிகளை 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து விட்டது தெரிய வந்துள்ளது. இந்த நிராகரிப்பை ஆளுநர் பன்வாரிலால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் தனது முடிவை அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் மறுத்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்களை விடுதலை செய்ய கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அதிமுக அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்தது. இது குறித்து ஆளுநருக்கு பல தடவை நினைவூட்டல் கடிதங்களையும் எழுதியது. அப்போதெல்லாம், ஆளுநர் ஆய்வு செய்து வருகிறார் என்று பதில் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் திட்டவட்டமாக முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதே சமயத்தில் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் எழுவரில் ஒருவரான மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், தங்களின் விடுதலை குறித்து தலைமை அமைச்சர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

இதேபோன்று, ஆறு மாதங்களுக்கு முன் அவர் ஆளுநருக்கு தன்னுடைய விடுதலை குறித்துக் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய கடிதத்தில், 8 சீக்கிய பிரிவினைவாத போராளிகளின் விடுதலையைப் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். 1995-ம் ஆண்டு பஞ்சாப்பின் முதலமைச்சராக இருந்தவர் காங்கிரசைச் சார்ந்த பீண்ட் சிங். அவர் சென்ற காரின்மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றதாகப் பலர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். 

இவ்வழக்கில் தொடர்புடைய பல்வந்த் சிங்க் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், காலிஸ்தான் தனிநாடு கோரும் 8 சீக்கியப் போராளிகளை விடுவிக்க சம்மதித்தும் அரசு அண்மையில் ஒரு முடிவை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்துதான் ரவிச்சந்திரன் எழுதியிருக்கிறார். தலைமை அமைச்சரிடம் மிகப் பணிவாக முறையிடும் தொனியில் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது பளிச்சென பல கேள்விகளை இது முன்வைப்பதைப் புரிந்துகொண்டு பார்க்கமுடிகிறது. அந்தக் கேள்விகள் பின்வருமாறு:

1. இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி என்று சமத்துவம் பேணும் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் இந்திய அரசு, ஆயுள் கைதிகள் விடுதலை விசயத்தில் மட்டும் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்வது ஏன்?

2. பஞ்சாப்பின் இந்த 8 சீக்கியப் போராளிகள் மீதும், பல்வேறு தீவிரவாத, தேசத் துரோக வழக்குகள் போடப்பட்டு, ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில், சீக்கியப் போராளிகளை விடுவிக்கக் கேட்ட பஞ்சாப்பின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டுவிட்டு, எங்கள் ஏழு பேர் விடுதலையைப் பல ஆண்டுகளாகக் கோரும் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரிப்பது ஏன்?

3. உச்ச அறங்கூற்றுமன்றம் எங்கள் எழுவரின் மீதிருந்த தடா சட்டப் பிரிவுகளின் வழக்குகளிலிருந்தெல்லாம் எங்களை விடுவித்த நிலையிலும்கூட, எங்களுக்கு விடுதலை மறுக்கப்பட்டது. ஆனால், 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் பல்வேறு தடா வழக்கில் கைதாகியிருந்த பல பிரிவினைவாதிகள், பல வட இந்திய மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று விடுவிக்கப்பட்டபோதும் அமைதியான மாநிலமாகத் திகழும் தமிழகத்திலிருந்து வரும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதேன்?

4. குடிஅரசின் உரிமைகளை நிலைநாட்ட, சட்டரீதியாக எங்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியும், சட்டரீதியான விளக்கங்களின்றி பல்வேறு வகையில் எங்கள் விடுதலையைத் தடுத்து, 28 ஆண்டுகளாகியும் சிறையிலிருந்து எங்களை விடுவிக்காதது ஏன்?

5. ஆளுநரின் அதிகாரங்களை விளக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-ன்படி, இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு நேரடித் தொடர்பு இல்லையெனினும், தேர்தலின்றி இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர், இந்திய அரசின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாகவே தமிழகம் நம்புகிறது. அவ்வாறு இல்லையேல், ஆளுநரிடமிருந்து எவ்வித பதிலும் இன்றி நீண்டநாள்களாக நாங்கள் காத்திருப்பது ஏன்?

6. வரலாற்று, கலாசார, பண்பாட்டுரீதியாக வட இந்திய, தென் இந்தியப் பகுதிகளிடையே பல வேறுபாடுகளும், தமிழ்த் திராவிட தென் இந்திய மக்கள் எனவும் ஆரிய கங்கைக்கரை வட இந்திய மக்கள் எனவும் மனத்தளவில் பிரிந்திருக்கும் இந்தியாவில், அதைச் சரிசெய்து ஒன்றுபடுத்த முயலவேண்டிய நிலையில், பஞ்சாப்பிற்கும் தமிழகத்திற்கும் வைக்கும் இரட்டை நிலைப்பாடு அந்தப் பிரிவினையை வளர்க்காதா?

7. தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலேயே எங்கள் எழுவர் விடுதலை குறித்துப் பேசியும், இந்திய அரசு தலையிட்டு எந்தவித தீர்வும் வழங்காமல் இருப்பது, இந்தியா முழுமைக்கும் சம நீதி இருக்கிறது என்னும் நம்பிக்கையைக் குலைப்பதுபோல ஆகாதா?

ரவிச்சந்திரனின் கடிதம், கேள்விகளை மட்டும் எழுப்பாமல், இவ்விசயங்களைக் குறிப்பிட்டு, தயவுகூர்ந்து இந்திய அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையாகத்தான் நீள்கிறது. 

இந்த நிலையில்தான் எழுவர் விடுதலையை ஆளுநர் நிராகரித்து விட்டாதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது இந்நிலையில், சட்டத்தை மீறிய அரசியல் காரணங்களுக்காக இன்னும் சிறைக் கம்பிகளுக்குள் இருக்கும் இந்த எழுவருக்கும் நீதி வேண்டும் என்பதே அந்தக் கடிதத்தின் அடிநாதமாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,309.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.