Show all

போனஸ் பணத்தை டாஸ்மாக் கடையில் செலவழிக்கக் கூடாது.

தீபாவளிக்காக வழங்கப்பட்ட போனஸ் பணத்தை தொழிலாளர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்க செலவழிக்கக் கூடாது என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பூரில் ஆண்டுதோறும் தீபாவளி ஒட்டிய காலத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் போனஸ் பெறும் தொழிலாளர்கள் மதுவுக்காக அதிகமாக செலவிடுவதே என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்டு 100 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. தீபாவளி போனஸ் வழங்கும் வேளையில் வழக்கமாக விற்பனையாகும் அளவைவிட கூடுதலாக ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரைக்கும் மது விற்பனை நடைபெறுவதாகக் கூறுகிறார் டாஸ்மாக் மேலாளர் டி.முத்துவடிவேல்.

கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,200 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் போக்கை மாற்றும் விதமாக, திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவும், ஸ்ரீபுரம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனமும் ஜவுளி தொழிலாளர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அதாவது, தீபாவளிக்காக வழங்கப்பட்ட போனஸ் பணத்தைத் தொழிலாளர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கி செலவழிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், தொழிலாளர்கள் போனஸ் பணத்தை பட்டாசுக்கும் செலவழிக்காமல் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.