Show all

செல்பேசி அழைப்பு பாதியிலேயே தடைபட்டால் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

செல்பேசி அழைப்பு பாதியிலேயே தடைபட்டால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது.

செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போதே சிக்னல் கோளாறு காரணமாக அழைப்பு பாதியிலேயே தடைபட நேரிடும். இந்த பிரச்னை குறித்து, பயனாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில், இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, பல்வேறு கட்ட ஆய்வுகளை டிராய் மேற்கொண்டு வந்தது. அதனடிப்படையில், தனது பரிந்துரை அறிக்கையை டிராய் நேற்று அளித்தது. அதில், செல்பேசி அழைப்பு பாதியிலேயே தடைபட்டால் இனி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், அழைப்புத் தடையை ஈடு செய்யும் வகையில் வாடிக்கையாளர்கள் பேசுவதற்கு இலவசக் கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும் அல்லது அதற்கான கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 5 விநாடிகளிலேயே அழைப்பு தடைபட்டால் அந்த அழைப்புக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், 5 விநாடிகளைத் தாண்டிய நிலையில் தடைபடும் அழைப்புகளுக்கு கடைசி நிமிடத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது ஆகிய பரிந்துரைகளை டிராய் வழங்கியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.