Show all

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு சமூக நீதி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் 2014-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், பக்கம் 17-இல், வேலைவாய்ப்பில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில், பொதுத் துறை நிறுவனங்கள், படிப்படியாகத் தனியார் மயமாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, இனிமேல் கட்டாயம் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும். அப்படி வழங்குவது மட்டுமே சமூக நீதியின் நியாயமான, முழுமையான வெளிப்பாடாகும். இத்தகைய இட ஒதுக்கீடுகள் நீண்ட காலமாக அமெரிக்க ஐக்கியக் குடியரசில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டு முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென நடுவண் அரசை திமுக வலியுறுத்தும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தோம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த இந்த நோக்கத்திற்கு மேலும் ஒளியூட்டும் வகையில், இன்றைய நாளேட்டில், தலித்துகளுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு? என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், நடுவண் சமூக நீதித் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், தலித் சமூகத்தினருக்காக பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றுமாறு சமூக நீதித் துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் அண்மையில் உத்தரவிட்டது. தலித்துகளுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குதல், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளித்தல், பெரிய அளவில் தலித் மாநாட்டை நடத்துதல், தலித் எழுத்தாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இந்தத் திட்டத்திற்கான செயல் வடிவத்தினை பிரத்யேகமாக பிரதமர் அலுவலகம் தயாரித்துள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரின் ஆலோசனையின்படி இந்தச் செயல்வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு நடுவண் சமூக நீதித் துறை அமைச்சர் தவார் சந்த் கெலோட்டிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. தலித்துகளுக்குத் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று விரிவாக நடுவண் அரசு அதிகாரி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தலித் பிரிவினர், சாதி மதப் பிளவு எண்ணம் கொண்ட சில பாஜகவினராலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களாலும் தாக்கப்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களை மனதிலே கொண்டோ என்னவோ, நடுவண் பாஜக அரசு தலித் மக்களைச் சரிக்கட்டும் வகையில் இந்த அளவுக்குப் பெரிய அறிவிப்பினைச் செய்ய முன் வந்துள்ளது எனக் கருத நேரிட்டாலும்; நேர்மையோடும் உண்மையோடும், தலித் மக்களைக் கைதூக்கி விட வேண்டும் என்ற அடிப்படையில் நடுவண் அரசின் அறிவிப்பு அமைந்திருக்குமாயின், வரவேற்கத்தக்கதே என்பதில் இரு வேறு எண்ணங்களுக்கு இடமில்லை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு எனும் சிறப்பு மிக்க சமூக நீதிக் கருத்தாக்கத்தினை, அறிவிப்போடு நிறுத்தி விடாமல், தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, முழுமையான அளவில் நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களை வகுத்தளித்திடவும், அதற்கு இந்தியாவிலுள்ள சமூக நீதி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுத்திடவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.