Show all

சவுதி அரேபியாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு

சவுதி அரேபியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்களுக்கு உதவ தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் பல நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். எல்லைக்கடவு நிறுவனங்களிடம் உள்ளதாலும், ஊதியம் தரப்படாததாலும் நாடு திரும்ப முடியாமல் உணவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உதவி கோரி சுட்டுரையில் பதிவிட்டுள்ளனர். இதற்கு சுட்டுரையில் பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 10,000 இந்திய தொழிலாளர்கள் நிதி மற்றும் உணவு இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். சவுதி அரேபியாவில் வாழும் 30 லட்சம் இந்தியர்கள், தங்கள் நாட்டு சகோதர சகோதரிகளுக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதற்கட்டமாக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வேலையிழந்து தவித்து வரும் இந்தியத் தொழிலாளர்களுக்கு 15,500 உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி அரேபியா மற்றும் குவைத் அதிகாரிகளுடன் நடுவண் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்க்க நடுவண் இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதி அரேபியா செல்ல உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.