Show all

மக்களைத் தீவிரவாதிகள் அரவணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு உருவாக்கும் ராணுவத்தினர்

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ராணுவத்தினர் தவறாக பயன்படுத்துவதை கண்டித்து இன்று பிற்பகல் அரச தீவிரவாதத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த ஹுரியத் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி அழைப்பு விடுத்திருந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக வௌ;ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் இங்குள்ள பிரிவினைவாத சக்திகள் நாட்டுக்கு எதிராகவும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹந்த்வாராவில் கடந்த 12-ம் தேதி, பள்ளி மாணவியை ராணுவ வீரர்கள் மானபங்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு நடைபெற்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நான்கு நாட்களுக்கும் மேலாக நீடித்த வன்முறை சம்பவங்களில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவி ராணுவ வீரர்கள் என்னிடம் தவறாக நடந்துக் கொள்ளவில்லை, உள்ளூரைச் சேர்ந்த இரு சிறுவர்களே தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டனர் என்று மாஜிஸ்திரேட் முன்னர் வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை காப்பாற்ற, காவல்துறையினரின் தூண்டுதலின்பேரில் பாதிக்கப்பட்ட மாணவி பொய்யான ஒரு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு முன்னதாகவே ஹந்த்வாராவில் நான்கு ராணுவச் சாவடிகளையும் அகற்றவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. மாணவியைப் பாலியல் பலாத்காராம் செய்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு பின்னர் ஹந்த்வாரா பகுதியில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து, இங்குள்ள ராணுவச் சாவடிகளை அகற்றவேண்டும் கோரிக்கையானது வலுத்தது.

இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசும் இதே கோரிக்கையை முன்வைத்தது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சாவடிகள் மிகவும் முக்கியமானவை என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹந்த்வாரா மார்க்கெட் பகுதியில் இருந்த மூன்று ராணுவ சாவடிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இருந்த பிரதான சாவடியும் அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இனி அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் படைகளின் இந்த அட்டூழியத்தை எதிர்த்தும், அரச தீவிரவாதத்துக்கு முடிவுகட்டவும் மாநிலம் தழுவிய அளவில் இன்று பிற்பகல் போராட்டம் நடத்த ஹுரியத் மாநாடு என்ற பிரிவினைவாத அமைப்பு அழைப்பு விடுத்தது.

ஏற்கனவே, ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி கடந்த ஆறாம் தேதியில் இருந்து வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று அரசுக்கு எதிராக நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க  ஹுரியத் மாநாடு அமைப்பை சேர்ந்த மேலும் பல முன்னணி தலைவர்கள் வீட்டுக் காவலில் இன்று அடைக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க மாநிலம் முழுவதும் உள்ளூர் காவல்துறையினருடன் மத்திய ஆயுதப்படையினர் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.