Show all

விவசாயிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி

கெயில் நிறுவன எரிவாயு குழாய்களை,  தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியே எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கோரி விவசாயிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள விவசாய நிலங்கள் வழியாக,  கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களை பதிக்க நடுவண் அரசு அனுமதி அளித்தது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விவசாய நிலங்களில் குழாய்களை பதிக்க தமிழக அரசு தடை விதித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்களை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழாய் பதிக்க அனுமதி அளித்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி, தமிழக அரசு மற்றும் தே.மு.தி.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை,  கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக விவசாயிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க தடை விதிக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை வழியாக எடுத்துச்செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதை விசாரித்த நீதிபதிகள், கெயில் நிறுவனம் குழாய்களை பதிப்பது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய இயலாது எனக்கூறி, விவசாயிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

    

உச்சநீதிமன்றத்தின்  இந்த தீர்ப்பு,  தமிழக விவசாயிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.