Show all

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கவிருப்பதாகத் தகவல்

129ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கும் காலம் கனிந்துவிட்டதாக அக்கட்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1998ம் ஆண்டு பொறுப்பேற்றவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளும், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி. தற்போதுவரை அவர்தான் தலைவர். 129 ஆண்டு பழமையான காங்கிரஸ் கட்சியில், மிக நீண்ட காலமாக தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சோனியா காந்தி. சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி 2013-ஆம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.

தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை முன்னிருத்துவதற்காகவே துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளதாக அப்போதே கூறப்பட்டது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக ராகுல் காந்தி, காங்கிரசின் தலைவராக முடியவில்லை.  ராகுல் காந்தி அவரது தந்தை ராஜிவ்காந்தியின் இளமை காலத்தை போலவே, முதிர்ச்சியற்று காணப்படுகிறார் என்பதுதான் தலைமை பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்கான காரணமாக கூறப்பட்டு வருகிறது.

அவருக்கு பக்குவத்தை கொண்டு வருவதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பி சில பல ரகசிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  ஏனெனில் கடந்த ஆண்டு சுமார் இரு மாதகாலம், எங்கு சென்றார் என்று கூறாமல் ராகுல் காந்தியை எங்கோ ஒரு நாட்டில் மறைத்து வைத்திருந்தது காங்கிரஸ் தலைமை. இதையடுத்தாவது ராகுல் தலைமை பதவிக்கு வருவார் என சில தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் நடக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியாவின் தலைவர் பதவி மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டபோது, ராகுல் ஆதரவாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில்தான், தற்போது ஐரோப்பா சென்றுள்ள ராகுல், இந்தியா திரும்பியதும், அவருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜனவரி 7ம் தேதியை ஒட்டி, ராகுல் தாயகம் திரும்ப உள்ளதாகவும், அதன்பிறகு சில நாட்களில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை மீண்டும் கூட்டி, ராகுலை காங்கிரஸ் கட்சி தலைவராக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.