Show all

தேர்தலை நியாயமாக நடத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷன் கவலை

நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போதும் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை அதிகரித்து வருகிறது, பெரும்பாலோனார் செலவு கணக்கை குறைத்து காண்பிக்கிறார்கள். தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் தேர்தலை நியாயமாக நடத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷன் கவலை தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி பேசுகையில்,

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 535 பேரில் பெரும்பாலானவர்கள் 40 முதல் 80 சதவீத செலவு கணக்கையே தாக்கல் செய்துள்ளார்கள். உண்மையில் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டதை விட பலமடங்கு அதிகமாக வேட்பாளர்கள் செலவு செய்வது அனைவருக்கும் தெரியும். வேட்பாளர் சார்ந்த கட்சி அனைத்து தொகுதிகளிலும் பெரிய அளவு தொகையைப் பொதுப்பிரசாரத்துக்குச் செலவிடுவதால் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு அர்த்தமற்றதாகி விடுகிறது.

தேர்தலில் போட்டியிடுவோர் பெரும் தொகையை செலவிட வேண்டிய சூழல் காணப்படுவதால் சாதாரண மக்களால் தேர்தலில் போட்டியிடுவதை கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை. கிடைக்கும் நிதி ஆதாரத்தை அரசியல் கட்சிகள் மட்டுமே பயன்படுத்துவதாலும், தேர்தலில் பணம் மட்டுமே பிரதானமாக திகழ்வதால் சமூகத்திலும், அரசியலிலும் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டு பேசி தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளைச் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அக்கட்சிகளுக்குக் கிடைக்கும் நன்கொடைகளில் ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளதாக காட்டப்படுகிறது. இந்தத் தொகையைத் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க விலக்கு அளிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தேர்தல் நன்கொடைகளைக் கட்சிகள் மறைத்து விடுகின்றன.

நடுத்தர தனியார் நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு பணம் அளிக்கும் நிறுவனங்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் கட்சிகள் தடுக்க வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகளின் செலவுகளுக்கு பணம் தருவதற்காக தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகளை உண்டாக்குகின்றன. இவற்றின் வரவு-செலவு கணக்கை சமர்ப்பிக்கவும், மீறினால் தண்டனை அளிக்கவும் சட்டத்தில் இடமில்லை.

எனவே நாட்டில் நியாயமாக தேர்தல் நடைபெறவும், பணபலத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டம் தேவை. அனைத்து கட்சிகளும் இதற்கு முன்வந்தால்தான் சாத்தியம். அப்போதுதான் சட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும். இல்லையெனில் சட்டம் கொண்டு வந்தாலும் அதில் உள்ள சில பிரிவுகளைக் கட்சிகள் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தையே நிறைவேறவிடாமல் செய்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே இதில் கட்சிகளின் ஒருமித்த கருத்தும் ஆதரவும் தேவை.

தேர்தல் கமிஷனரின் கவலையை அரசியல் கட்சிகள் நாட்டின் எதிர்காலம் மற்றும் முன்னேற்றம் கருதி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.