Show all

கேரள மாநிலத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்ட மோடிக்கு கண்டனம் குவிகிறது

கேரள மாநிலத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கேரள அரசு பரிசீலிப்பதாக முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

கேரளாவில் பழங்குடி இன குழந்தைகளின் இறப்பு விகிதம், சோமாலியாவை விட அதிகமாக இருப்பதாக கூறினார்.

பிரதமரின் இந்தக் கருத்து கேரள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரதமருக்கு எதிராக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொச்சியில் நேற்று செய்தியாளர்களுடன் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கலந்துரையாடினார். அப்போது இந்த விவகாரம் குறித்து அவர்,

மோடி இந்த நாட்டின் பிரதமர். கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டதன் மூலம், கேரள மக்களை அவர் அவமதித்து விட்டார்.

நாங்கள் இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக பார்க்கிறோம்.

மனிதவள பட்டியலில் பா.ஜனதா ஆளும் குஜராத்தை விட நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம். ஆனால் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே மோடி இந்தத் தகவல்களை வெளியிட்டு உள்ளார். இது தவறு. பிரதமராக இருக்கும் மோடி இதுபோன்ற தகவல்களை கூறுமுன் அலுவலக ஆவணங்களை சோதித்து பார்த்திருக்க வேண்டும்.

 

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

அத்துடன் இந்தப் பிரச்சினையை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.

முன்னதாக தனது முகநூல் தளத்தில் அவர் வெளியிட்ட கடிதம் ஒன்றில்,

பிரதமரின் வார்த்தைகளால் கேரள மக்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே பிரதமர் அமைதி காக்காமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கேரள மக்கள் எதிர்பார்க்கின்றனர். பிரதமர் தனது கருத்தை திரும்ப பெறுவார் என கேரள மக்கள் இன்னும் நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

பிரதமரின் இந்த ஒப்பீட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில்,

பிரதமர் முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். கேரளாவில் சோமாலியாவை போன்ற எந்த ஒரு சூழலும் இல்லை. ஏனென்றால் இங்கு ஒருபோதும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில்லை

என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.