Show all

கச்சத் தீவில் இலங்கை கடற்படை முகாம்

கச்சத் தீவில் இலங்கை கடற்படை முகாம்? அறிக்கை அளிக்க இந்திய தூதருக்கு உத்தரவு

கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு 1974-இல் செய்து கொண்ட பிறகு, அத்தீவில் இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்திக் கொள்வதற்காக சென்று வர தொடக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இலங்கை அரசு அனுமதி அளித்தது.

ஆனால், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு சண்டையைக் காரணம் காட்டி கச்சத் தீவுக்கு இந்திய மீனவர்கள் வருவதற்கு பல்வேறு கெடுபிடிகளை இலங்கை கடற்படை விதித்தது. பின்னர் இந்திய மீனவர்களுக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழகச் சட்டப்பேரவையிலும் பல முறை ஆளும், எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.

கச்சத் தீவு ஒப்பந்தத்தை நாடாளுமன்ற அனுமதியின்றி இலங்கையுடன் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு மேற்கொண்டது சட்டவிரோதமானது எனக் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் பாஜக நடுவண் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போன விவகாரம் என்று கூறியது.

இந்நிலையில், கச்சத் தீவில் ரூ. 1 கோடியில் புதிய தேவாலயத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் பிஷப் ஞானபிரகாசம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் வடக்கு மாகாணக் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயங்களின் பங்குத்தந்தை ஜோசஃப் தாஸ் ஜெபரத்னம், அந்தோணி ஜெயரஞ்சன், நிக்ஸன் கொலின், இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல் படை உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வையொட்டி, இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னே வெளியிட்டுள்ள செய்தியில், கச்சத் தீவில் புதிய தேவாலயம் அமைக்கவும், அப்பகுதியை முழுமையாக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் இலங்கை வடக்கு மாகாண கடற்படை முழு ஒத்துழைப்பு வழங்கும்

என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக கச்சத் தீவில் தேவாலயம் அமைக்கும் இலங்கை அரசின் முயற்சி, இந்திய மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய மீனவர் பேரவை அமைப்பும் நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், கச்சத் தீவில் புதிய தேவாலயம் அமைக்கப்படுவதையொட்டி, அங்குள்ள தீவைச் சுற்றியும் கடற்படை கண்காணிப்புக் கோபுரங்களையும், தாற்காலிக முகாமையும் அமைக்க இலங்கை கடற்படை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய கடல் பகுதி வழியாக கச்சத் தீவுக்கு வரும் இந்திய மீனவர்களை தடுக்க இலங்கை கடற்படை புதிய உத்தியை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் பல்வேறு இலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இது குறித்து தில்லியில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் அளித்த பதில், 

கச்சத் தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்கும் திட்டம் தொடர்பான செய்திகளை நானும் ஊடங்கள் வாயிலாக படித்து அறிந்தேன். அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளோம். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இலங்கை மீனவர்கள் யாரும் சிறைப்பிடிக்கப்படவில்லை. அந்நாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான 13 படகுகள் மட்டுமே இந்தியாவில் உள்ளன. ஆனால், இலங்கையில் 34 இந்திய மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 96 படகுகள் அந்நாட்டில் உள்ளன

என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.