Show all

2016 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என வைகோ திடீர் அறிவிப்பு

2016 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என வைகோ திடீர் அறிவிப்பு

 

     நடக்கவிருக்கும் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திடீரென்று திங்கட்கிழமை (25-04-2016) அறிவித்திருக்கிறார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று ம.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் விநாயக் ரமேஷ் என்பவர் கோவில்பட்டித் தொகுதியில் மனுத்தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்தத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தான் சார்ந்துள்ள ஜாதிக்கு 70,000 வாக்குகள் இருப்பதாகவும் வைகோவின் ஜாதியினருக்கு 52,000 வாக்குகள் மட்டுமே இருப்பதாகவும் அதையும் அ.தி.மு.க வேட்பாளர் பிரிப்பார் என்று கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகுதியில் தி.மு.க. ஜாதிக் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்குத் திட்டக்குளம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்கச் சென்றபோது, அதனை எதிர்த்து சிலர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தது குறித்துப் பேசியிருக்கும் வைகோ, தன்னைக் குறிவைத்து ஜாதிக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழலை ஒழிக்கவும் மது விலக்கைக் கொண்டுவரவும் சுதந்திர தமிழ் ஈழத்தை ஏற்படுத்தவும் எஞ்சியுள்ள தன் வாழ்நாளைச் செலவழிக்கப்போவதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை அடங்கிய மக்கள் நலக் கூட்டணியில் வைகோ தலைமையிலான ம.தி.மு.க. இடம்பெற்றிருக்கிறது.

இந்தக் கூட்டணி விஜயகாந்த் தலைமையிலான தே.மு.திகவுடனும் வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும் இணைந்து இந்த சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது.

வைகோவின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.