Show all

விமானத்தில் கன்னையா குமார் கழுத்தை பயணி ஒருவர் நெரிக்க முயன்ற தகவல்

விமானத்தில் பயணி ஒருவர் தனது கழுத்தை நெரிக்க முயன்றார் என்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார். இவர் தேசதுரோக வழக்கில் கைதாகி பின்னர் பிணையில் விடுதலை ஆனவர். இவர் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார். இதை தொடர்ந்து, நேற்று புனேயில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்தார். ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

அப்போது,

உடன் இருந்த பயணி ஒருவர் கன்னையா குமாரிடம் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், அந்த பயணி கன்னையா குமாரின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமான ஊழியர்கள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பாதுகாப்பு கருதி கன்னையா குமார் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கன்னையா குமார் சாலை மார்க்கமாக காரில் புனே சென்றடைந்தார். விமானத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அவர் சுடடுரையில்;,

விமானத்துக்குள் வைத்து ஒருவர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயன்றார். என் மீது தாக்குதலும் நடத்தினார். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மறுத்துவிட்டனர்

என்று குற்றம்சாட்டினார்.

 

இதனிடையே, கன்னையா குமார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும், அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில், அவரது பெயர் மனஸ் ஜோதி தேகா (வயது 33) என்பதும், பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இருப்பினும், இந்தத் தாக்குதல் சம்பவத்தை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

‘‘விமானத்தில் என் கால்கள் தடுமாறியதால், சமநிலை பெறுவதற்காக கன்னையா குமாரின் கழுத்தை நோக்கி கைகள் சென்றன. அவரது புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு தெரியாது. மலிவான விளம்பரம் பெறுவதற்காக இதுபோன்ற சூட்சமங்களில் அவர் ஈடுபடுகிறார்’’

என்றார்.

கன்னையா குமார் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து மும்பை காவல்துறை இணை ஆணையர் தேவன் பார்தி தலைமையில் விரிவான விசாரணை நடத்துவதற்கு மராட்டிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநில உள்துறை இணை அமைச்சர் ராம் ஷிண்டே கூறியதாவது:

பாரதீய ஜனதா தலைமையிலான அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கன்னையா குமார் முயற்சிக்கிறார். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். அவர் விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறுகிற வரையில், அவருக்கு முழுமையான பாதுகாப்பை மாநில அரசு அளித்தது. விமானத்துக்குள் யாருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது.

 

கன்னையா குமார் 3 பேருடன் பயணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட ஜன்னல் ஓர இருக்கைக்கு சென்றபோது, நடுவில் அமர்ந்திருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நபருக்கு அவர் தான் கன்னையா குமார் என்பது தெரியாது. அதேசமயம், தன்னை கன்னையா குமார் தாக்கியதாக அந்த நபரும் குற்றம்சாட்டுகிறார்.

விமானத்தில் வைத்து பயணி ஒருவர் தன்னுடைய கழுத்தை நெரிக்க முயன்றதாக கன்னையா குமார் வெளியிட்ட தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.